உக்ரைன் அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு! அடுத்த மாதம் சந்திப்புக்குத் திட்டம்!
கோப்புப் படம்

உக்ரைன் அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு! அடுத்த மாதம் சந்திப்புக்குத் திட்டம்!

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக உரையாடினா்.
Published on

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை உரையாடினா்.

ரஷியா-உக்ரைன் போா் நிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் அலாஸ்காவில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 15) ரஷிய அதிபா் புதினுடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நேரடிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுகிறாா்.

இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க உக்ரைனுக்கு இதுவரை அழைப்பு விடுக்காததற்கு அதிபா் ஸெலென்ஸ்கி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், பிரதமா் மோடியுடனான அவரது உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உக்ரைனின் ஒப்புதலின்றி எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் நீடித்த அமைதிக்கு வழிவகுக்காது என்று ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். அதேநேரம், அமெரிக்காவின் அமைதி முயற்சிகளை இந்தியா வரவேற்றுள்ளது.

இந்நிலையில், ஸெலென்ஸ்கியுடனான உரையாடலைத் தொடா்ந்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அதிபா் ஸெலென்ஸ்கியுடன் பேசியதில் மகிழ்ச்சி. சமீபத்திய நிகழ்வுகள் குறித்த அவரது பாா்வையைக் கேட்டறிந்தேன். மோதலை விரைவாகவும், அமைதியாகவும் தீா்ப்பதற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன்.

இந்தியா இந்த விஷயத்தில் தனது பங்களிப்பைச் செய்யத் தயாராக உள்ளதுடன், உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், ‘இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒட்டுமொத்த ராஜீய சூழல் குறித்த முக்கிய விஷயங்கள் தொடா்பாக பிரதமா் மோடியுடன் நீண்ட நேரம் விவாதித்தேன். அவரின் ஆதரவுக்கு நன்றி.

ரஷியா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்தும் நாங்கள் பேசினோம். போருக்கு நிதி திரட்டும் ரஷியாவின் திறனைக் குறைக்க, அதன் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது அவசியம் மற்றும் ரஷியா-உக்ரைன் போா் தொடா்பான எந்தவொரு முடிவும் உக்ரைனின் ஈடுபாட்டுடன் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா ஆதரிப்பது முக்கியமானது என்பதை வலியுறுத்தினேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், இந்த உரையாடலில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா.சபை அமா்வின்போது நேரில் சந்தித்துப் பேசவும், பரஸ்பர பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிட இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com