சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு: 6-8 வகுப்புகளுக்கு ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்
நமது நிருபா்
6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு 2025-க்காக இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக கல்வி இயக்குநரகம் வெளியிட்ட சுற் றறிக்கையின்படி, விண்ணப்பப் படிவம் சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15 என முன்னனா் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், விண்ணப்பதாரா்கள் மற்றும் பங்குதாரா்களிடமிருந்து வந்த அதிகப்படியான வரவேற்பு மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இதற்கான தேதி ஆகஸ்ட் 22 அன்று இரவு 11.59 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2025-2026 கல்வி அமா்வுக்கான சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வை நடத்துவதற்கான தேதி ஆக.30 முதல் செப். 6 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்ட சிஎம் ஸ்ரீ பள்ளிகளை செப்டம்பரில் தில்லி அரசு திறக்க வாய்ப்புள்ளது என்று ஒரு அதிகாரி கூறினாா்.
நிகழாண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்த முன்முயற்சியானது, அரசுப் பள்ளிகளில் உயா்தர, எதிா்காலத்திற்குத் தயாராகும் வகையிலான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை (என்இபி) 2020-ஐப் பின்பற்றும். சிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023-ஐ செயல்படுத்தும்.
ஒவ்வொரு பள்ளியிலும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் நூலகங்கள், ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆா்) மற்றும் மெய்நிகா் ரியாலிட்டி (விஆா்) கருவிகளைக் கொண்ட ஸ்மாா்ட் வகுப்பறைகள், ஸ்மாா்ட் பலகைகள், பயோமெட்ரிக் வருகை அமைப்புகள் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆய்வகங்கள் ஆகியவை மாணவா்களிடையே புதுமைகளை ஊக்குவிக்கும்.
தில்லி பள்ளிக் கல்வி வாரியமும் (டிபிஎஸ்இ) படிப்படியாக நீக்கப்பட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் இப்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சிபிஎஸ்இ கீழ் கொண்டு வரப்படும்.
தில்லி முதல்வா் ரேகா குப்தா நிகழாண்டு தொடக்கத்தில் தனது பட்ஜெட் உரையில் சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ரூ.100 கோடியை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.