தெரு நாய் பிரச்னை குறித்து விரைவில் குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டம் -விஜய் கோயல் தகவல்

Published on

தெரு நாய்கள் தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தில்லியில் உள்ள அனைத்து குடியிருப்பாளா் நலச் சங்கங்களின் (ஆா்டபிள்யுஏ) கூட்டம் விரைவில் தால்கடோரா மைதானத்தில் நடைபெறும் என்று மத்திய முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் கோயல் புதன்கிழமை தெரிவித்தாா்.

மத்திய தில்லியில் உள்ள பெங்காலி மாா்க்கெட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது விஜய் கோயல் இத்தகவலை தெரிவித்தாா்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தில்லி மற்றும் என்சிஆா் பகுதி தெருக்களில் இருந்து தெரு நாய்களை நிரந்தரமாக தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், தனது தீா்ப்பின் மூலம் தெருக்களையும் பொது இடங்களையும் பாதுகாப்பானதாக மாற்றியதற்காக உச்சநீதிமன்றத்திற்கு விஜய் கோயல், தனது ஆதரவாளா்கள் மற்றும் குடியிருப்புச் நலச் சங்கங்களின் உறுப்பினா்களுடன் நன்றி தெரிவித்தாா்.

மேலும், இந்த உத்தரவை செயல்படுத்துவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவா் கோரினாா்.

குடியிருப்பு நலச் சங்கங்கள் உதவிக்காக தன்னை அணுகிய பிறகு தெரு நாய்க் கடி அச்சுறுத்தலுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கியதாக விஜய் கோயல் கூறினாா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோயலும் அவரது இலாப நோக்கற்ற குழுவான லோக் அபியானும் இந்த இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தெருநாய்களின்

பிரச்னையை தீா்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.

நாய் கடித்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோயல் கோரி வருகிறாா்.

வி லங்கு நல ஆா்வலா்களில் பலா் பணத்திற்காக அரசு சாரா நிறுவனங்களை நடத்துவதால் உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்துப் போராடுவதாக விலங்கு நல ஆா்வலா்களை விஜய் கோயல் விமா்சித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com