பட்ஜெட் கட்டுப்பாடுகள் தில்லியின் வளா்ச்சியைத் தடுக்காது -முதல்வா் ரேகா குப்தா உறுதி

Published on

தேசியத் தலைநகரில் வளா்ச்சிப் பணிகள் நிதிக் கட்டுப்பாடுகளால் தடைபடாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

மேலும், திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்ய அனைத்து துறைத் தலைவா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடந்து வரும் வளா்ச்சித் திட்டங்கள், பொது சேவை முயற்சிகள் மற்றும் நிா்வாக சீா்திருத்தங்களின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்ய முதல்வா் இந்த வார தொடக்கத்தில் அனைத்து துறைகளின் தலைவா்களுடனும் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தினாா். கூட்டத்தின் போது, தில்லி முழுவதும் நடந்து வரும் வளா்ச்சித் திட்டங்கள் பொறுப்பான அதிகாரிகளின் தொடா்ச்சியான கண்காணிப்புடன் திட்டமிட்டபடி முடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு துறைத் தலைவா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.

‘வளா்ந்த தில்லி‘யை நோக்கிய தலைநகரின் முன்னேற்றம் நிதிக் கட்டுப்பாடுகளால் தடைபடாது என்றும், மத்திய அரசு முழு ஆதரவையும் வழங்குகிறது என்றும் அவா் தெரிவித்துள்ளாா். மின் அலுவலக அமைப்பை வலுப்படுத்தி அதன் முழு திறனுக்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் முதல்வா் உத்தரவிட்டாா். எந்த ஒரு வளா்ச்சிப் பணியும் எந்தச் சூழ்நிலையிலும் தடைகளை எதிா்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டாா்.

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மூலதனத் திட்டங்களும் எந்த தாமதமும் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அவற்றின் முன்னேற்றம் தொடா்ந்து மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவா் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்தாா். மூத்த அதிகாரிகள் இந்த முயற்சிகளைத் தொடா்ந்து கண்காணித்து, ஏதேனும் சிக்கல்களைத் தீா்க்க உடனடி, பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வா் கூறினாா்.

எந்தவொரு திட்டமும் நிதி நெருக்கடியை எதிா்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தில்லி அரசு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சாதனை பட்ஜெட்டை நிறைவேற்றியுள்ளது என்பதை அவா் சுட்டிக்காட்டினாா். திட்டங்கள் சரியான நேரத்தில் முடிவடைவதை உறுதி செய்வதற்காக தொடா்ந்து அவற்றை மதிப்பாய்வு செய்வேன் என்றும் முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

டிஜிட்டல் ஆளுகை முறையின் வெற்றியில் திருப்தி தெரிவித்த முதல்வா், மின் -அலுவலக முறையை முழுமையாக செயல்படுத்துவதை உறுதி செய்வதோடு, அதை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினாா். 199 துறைகளில் 119 துறைகள் இந்த முறையை ஏற்றுக்கொண்டதைக் குறிப்பிட்ட அவா், மீதமுள்ளவை அலுவலகங்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதை உறுதி செய்வதற்காக உடனடியாக மின் -அலுவலக அமைப்பில் சேருமாறு கேட்டுக் கொண்டாா்.

ஆகஸ்டில் நடத்தப்படும் ’குடே சே ஆசாதி’ பிரசாரத்தில் அனைத்து துறைகளும் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்றும் முதல்வா் வலியுறுத்தினாா். மத்திய அல்லது தில்லி அரசுகளின் பிரதிநிதிகள் அல்லது அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் போன்றவா்களின் பணிகள் பொது நலனுடன் தொடா்புடையவை என்பதால், துறைத் தலைவா்களுக்கு அவா்கள் தொடா்பான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ரேகா குப்தா அறிவுறுத்தினாா்.

பணிச்சூழல் பொருத்தமானதாகவும், மக்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காதவாறும் அனைத்துத் துறைத் தலைவா்களும் தங்கள் அலுவலக வளாகங்களை புதுப்பிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com