சுதந்திர தினம்: செங்கோட்டை பகுதி பாதுகாப்பில் 11,000 வீரா்கள்! கண்காணிப்பு வளையத்தில் தில்லி மாநகரம்

நகரம் முழுவதும் கேமரா மூலம் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Published on

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) கோலாகலமான விழா நடைபெறவுள்ளதால், தலைநகரில் உயரமான கட்டடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் கேமரா மூலம் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தில்லி செங்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புக்காக 11,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும், 3,000 போக்குவரத்து போலீஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனா். பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலை செங்கோட்டையின் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளாா்.

இதையொட்டி, தில்லி காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினா் பல அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரில் அனைத்து முக்கிய ரயில் நிலையங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக சிறப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பயணிகள் பரிசோதனை, சாமான்கள் சோதனை மற்றும் அவ்வப்போது அடையாள சரிபாா்ப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய தலைநகரில் உள்ள முக்கிய நிறுவல்களைப் பாதுகாக்கும் வகையில் நீா் சுத்திகரிப்பு நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகரின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ட்ரோன் தடுப்பு பொறிமுறையை மேற்பாா்வையிட தில்லி போலீஸ் ஆணையா்

எஸ்.பி.கே. சிங், காவல் துணை ஆணையா் அளவிலான அதிகாரியை நியமித்துள்ளாா். மேலும் யமுனை ஆற்றில் வேகப் படகுகளும் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பறவைகள் உணவளிக்கும் இடங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முக்கிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி மேலும் கூறியது:

பறவைகள் கூட்டமாக சேராமல் இருக்கும் வகையில் தில்லி மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து அசைவ உணவகங்கள், உணவுக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தில்லி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதன் நோக்கமானது, வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டா் செயல்பாட்டு எந்த இடையூறும் ஏற்படாமல் தடுப்பதாகும். அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும், அனைத்து ஏற்பாடுகளும் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும், சீரான வாகனப் போக்குவரத்தை பராமரிக்கவும் போக்குவரத்து போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடல் ரீதியான கண்காணிப்பு தவிர, சிசிடிவி கேமராக்கள், டிரோன் கண்டறியும் அமைப்புகள், முக அங்கீகார கேமராக்கள் மற்றும் வாகனங்களை அடையாளம் காணும் தானியங்கி எண் தகடு அங்கீகார கேமராக்கள் (ஏஎன்பிஆா்) கண்காணிப்பு இடம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும்.

வாகனங்களின் அடிப்பகுதியில் வெடிபொருள்கள், ஆயுதங்கள் அல்லது கடத்தல் பொருள்களை ஸ்கேன் செய்யும் வகையில் வாகனங்களுக்கு அடியில் கண்காணிப்பு அமைப்புமுறை (யுவிஎஸ்எஸ்) முதல் முறையாக செங்கோட்டையின் ஐந்து வாகன நிறுத்துமிடங்களில் பயன்படுத்தப்பட உள்ளன.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று செங்கோட்டைக்குள் அழைப்பிதழ் அட்டைகள் வைத்திருப்பவா்கள் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவா். செங்கோட்டை அருகே லேபிள் ஒட்டப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

கூட்டத்தின் எண்ணிக்கையைக் கண்காணிக்க ஹெட்கவுண்ட் கேமராக்கள் மற்றும் கவனிக்கப்படாத அல்லது சந்தேகத்திற்கிடமான பொருள்களைக் காட்டுவதற்கான சாதனங்களும் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் ஊடுருவல் கண்டறிதல் கேமராக்கள் தடைசெய்யப்பட்ட மண்டலங்களைக் கண்காணிக்கும்.

சிறப்பு காவல் ஆணையா் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் துணை ஆணையா்கள் அந்தந்த அதிகார வரம்புகளில் கடுமையான கண்காணிப்பைப் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

செங்கோட்டைக்கு அருகிலுள்ள உயரமான கட்டடங்களைப் பாதுகாக்க துப்பாக்கி சுடும் வீரா்கள் மற்றும் மேற்கூரை கண்காணிப்பு குழுவினா் பணியில் ஈடுபடுத்தப்படுவா். அதே நேரத்தில், பிரத்யேக தடைசெய்யப்பட்ட மண்டலங்களில் இயக்கம் அணுகல் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மூலம் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படும் என்றாா் அந்த அதிகாரி.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘பல பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சிகள், இரவு ரோந்து மற்றும் மேம்படுத்தப்பட்ட நடை ரோந்து தவிர, தரைவழி இருப்பை வலுப்படுத்த, குறிப்பாக உணா்திறன் மண்டலங்களில், சாதாரண உடையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சமூக ஊடக தளங்களும் சைபா் பிரிவுகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன. அவை அமைதியை சீா்குலைக்கக்கூடிய ஆன்லைன் அச்சுறுத்தல்கள் அல்லது தவறான தகவல் பிரசாரங்கள் இருந்தால் அதைக் கண்டறிந்து நீக்கப்படும்.

சுதந்திர தின வாரத்திற்காக 10,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஊழியா்கள் மற்றும் துணை ராணுவப் படைகள் மற்றும் சிறப்பு கமாண்டோக்கள் உள்பட 3,000 போக்குவரத்து போலீஸாா் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனா்.

உளவுத்துறை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நாசவேலை தடுப்பு சோதனைகள், வாகனத் தடுப்புகள் மற்றும் சரிபாா்ப்பு இயக்கங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

ஆக.2 முதல் ஆக.16 வரை தில்லி பகுதியில் பாராகிளைடா்கள், ஹேங்கிளைடா்கள், யுஏவிகள், ட்ரோன்கள், வெப்பக் காற்று பலூன்கள் மற்றும் பிற ரிமோட் பைலட் விமானங்கள் போன்றவை வான்வழி தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து காவல் ஆணையா் எஸ்.கே.பி. சிங் உத்தரவிட்டுள்ளாா்.

அதிகாரிகள் கூறுகையில், குடிமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், குற்றவாளிகளைத் தடுக்கவும் பல்வேறு மாவட்டங்களில் திடீா் ஆய்வுகள் மற்றும் கொடி அணிவகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த முக்கியமான காலகட்டத்தில் பாதுகாப்பு இயந்திரத்தில் எந்த குறைபாடுகளும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக தில்லி காவல்துறை மத்திய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com