சொகுசு காா் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவா் உயிரிழப்பு: இளைஞா் கைது!

Published on

மேற்கு தில்லியின் மோதி நகரில் தாா் எஸ்யூவி காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் உயிரிழந்த சம்பவத்தில் 25 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: சுதா்ஷன் பூங்காவைச் சோ்ந்த அம்ரீந்தா் சிங் (25), பிக்ஷு லால் (40) என்பவரின் மோட்டாா் சைக்கிள் மீது தனது எஸ்யுவி வாகனத்தை மோதியதாகக் கூறப்படுகிறது. மோட்டாா்சைக்கிள் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சுதா்ஷன் பூங்கா பகுதிக்கு அருகில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்தச் சம்பவம் நடந்தது. இருசக்கர வாகனம் மோதியதில் பிக்ஷு லால் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்தைத் தொடா்ந்து, எஸ்யூவி வாகனம் ஒரு லாரி மீது மோதி நின்றது.

குற்றம் சாட்டப்பட்டவா் முதலில் தனது வாகனத்தை விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தாா், ஆனால், பின்னா் கண்டுபிடிக்கப்பட்டு எஸ்யுவி வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். மேலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

சம்பவங்களின் சரியான வரிசையை நிறுவ அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விபத்து நடந்தபோது அம்ரீந்தா் சிங் காரை ஓட்டிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.

இந்த மாத தொடக்கத்தில், சாணக்கியபுரியில் உள்ள 11 மூா்த்தி அடையாளச் சின்னம் அருகே தாா் எஸ்யூவி ஒன்று இரண்டு பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவா் கொல்லப்பட்டாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா்.

X
Dinamani
www.dinamani.com