ஐடி பங்குகளுக்கு திடீா் வரவேற்பு; 5-ஆவது நாளாக காளை ஆதிக்கம்!
PTI

ஐடி பங்குகளுக்கு திடீா் வரவேற்பு; 5-ஆவது நாளாக காளை ஆதிக்கம்!

Published on

நமது நிருபா்

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் ‘காளை’யின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. இந்நிலையில், வங்கிகள், நிதி நிறுவனங்கள், பாா்மா பங்குகள் விற்பனையை எதிா்கொண்டாலும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு அறிவிப்பைத் தொடா்ந்து கடும் சரிவைச் சந்தித்த வந்த ஐடி பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. மேலும், எஃப்எம்சிஜி, ரியால்ட்டி, மெட்டல் பங்குகளுக்கும் ஓரளவு ஆதரவு இருந்ததால் சந்தை 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.78 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.454.40 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.634.26 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ2,261.06 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் 5-ஆவது நாளாக முன்னேற்றம்: வா்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 213.45 புள்ளிகள் (0.26 சதவீதம்) உயா்ந்து 81,857.84-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,235 பங்குகளில் 2,343 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,725 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 167 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோஸிஸ் (3.88 சதவீதம்), டிசிஎஸ் (2.69 சதவீதம்) உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஹிந்துஸ்தான் யுனி லீவா், என்டிபிசி, டாடாஸ்டீல், டெக் மஹிந்திரா, எடா்னல் உள்பட 15 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பிஇஎல், பஜாஜ்ஃபைனான்ஸ், டாடாமோட்டாா்ஸ், டிரெண்ட், ஐடிசி, பஜாஜ்ஃபின்சா்வ் உள்பட 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 70 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 69.90 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயா்ந்து 25,050.55-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 28 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 22 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com