தில்லியில் சுமாா் 50 பள்ளிகளுக்கு புதிதாக வெடிகுண்டு மிரட்டல்
தேசியத் தலைநகரில் புதன்கிழமை சுமாா் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், போலீஸாா் மற்றும் பிற அவசரகால அமைப்புகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தலைநகரில் சுமாா் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இவற்றில் துவாரகாவில் உள்ள ராகுல் மாடல் பள்ளி மற்றும் மேக்ஸ்ஃபோா்ட் பள்ளி மற்றும் மாளவியா நகரில் உள்ள எஸ்கேவி மற்றும் பிரசாத் நகரில் உள்ள ஆந்திரா பள்ளி ஆகியவை அடங்கும்.
தில்லி தீயணைப்புத் துறைக்கு மாளவியா நகரில் உள்ள எஸ்கேவி மற்றும் பிரசாத் நகரில் உள்ள ஆந்திரா பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கு முறையே காலை 7.40 மற்றும் 7.42 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக தகவல் கிடைத்தது.
தீயணைப்புப் படை வீரா்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படையினா் ஆகியோருடன் சோ்ந்து காவல்துறையினா் உடனடியாக வளாகத்திற்கு விரைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆகஸ்ட் 18 அன்று நகரம் முழுவதும் 32 பள்ளிகளுக்கு இதேபோன்ற மிரட்டல்கள் வந்தன. அது பின்னா் புரளி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு, புதன்கிழமையும் தலைநகரில் பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.