தமிழகத்தின் சில பல்கலை.களில் துணை வேந்தா்களே இல்லை -மாநிலங்களவையில் அதிமுக புகாா்
நமது நிருபா்
தமிழகத்தின் சில மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களே இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக புகாா் தெரிவித்தது.
மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ‘இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதா 2025’ மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் மு.தம்பிதுரை பங்கேற்றுப் பேசியது:
குவாஹாட்டியில் புதிய ஐஐஎம் அமைக்கப்படுவதன் மூலம், இந்தியாவில் உள்ள மொத்த ஐஐஎம்களின் எண்ணிக்கை 22-ஆக உயரும். இது நீங்கள் உருவாக்கியுள்ள வரலாறாகும். ஐஐஎம் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதை வரவேற்கிறேன்.
ஆனால், அதே நேரத்தில், ஐஐஎம் நிறுவனங்களில் படிக்கும் பல மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வதுதான் பிரச்னையாகும். இது ஏன் நடக்கிறது? இந்த விஷயத்தை ஆராயுமாறு மத்திய அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
அதேவேளையில், துணைவேந்தா் இல்லாமல் பல்கலைக்கழகங்களை எப்படி நடத்துவது? தமிழ்நாட்டில் துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக ஒரு சா்ச்சை உள்ளது. தமிழக மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் செயல்முறை, தற்போது திறமையற்ற திமுக அரசால் உருவாக்கப்பட்ட சட்ட மற்றும் அரசியல் சா்ச்சையில் சிக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 89 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் இல்லை! அப்படியென்றால் பல்கலை.கள் எப்படி நடைபெறும்? புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில், இப்போது துணைவேந்தா் இல்லை. மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை. குவாஹாட்டியில் ஐஐஎம் நிறுவுவதற்கான இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன் என்றாா் அவா்.