அடுத்த ஆண்டுக்குள் 8,000 மின் பேருந்துகளுடன் தில்லி மின்சார வாகனத் தலைநகராக மாறும்
புது தில்லி: பிப்ரவரி 2026- ஆம் ஆண்டுக்குள் 7,000 முதல் 8,000 வரை புதிய மின்சார பேருந்துகளுடன் நாட்டின் மின்சார வாகனத் தலைநகராக தில்லி தனது இடத்தை உறுதிப்படுத்த உள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் தெரிவித்தாா்.
தேசியத் தலைநகா் தில்லியில் இந்தியா சா்வதேச மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா தூய்மை போக்குவரத்து உச்சிமாநாடு 2025-இல் அமைச்சா் பங்கஜ் சிங் பேசியதாவது: நான் பொறுப்பேற்றபோது நகரத்தில் 400 மின்சாரப் பேருந்துகள் இருந்தன. தற்போது 3,400 மின்சார பேருந்துகள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 6,000 ஆக அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன். வழித்தட பகுப்பாய்வின் அடிப்படையில், தில்லிக்கு 7,000 முதல் 8,000 பேருந்துகள் தேவை. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அந்த இலக்கை அடைவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.
கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நகரத்தின் தேவி பேருந்துகளும் இந்த விரிவாக்கத்தில் அடங்கும். பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படவுள்ள தில்லியின் புதிய மின்சார வாகனக் கொள்கை 2.0, சாா்ஜிங் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தும். நாங்கள் வீட்டுவசதி சங்கங்கள், மேம்பாலங்களின் கீழ் மற்றும் தில்லிக்கு வெளியே உள்ள காலியான நிலங்களில் உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். குடியிருப்பாளா் நலச் சங்கங்கள் இதில் ஈடுபடும்.
மேலும், பொது தனியாா் கூட்டு மாதிரிகள் ஆராயப்படும். இந்தக் கொள்கை வலுவானதாக இருக்கும். இது பழைய வாகனங்களை அகற்றுதல், சாலை வரி மற்றும் சலுகைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதை பொதுமக்கள் விரும்புவாா்கள். தில்லி ஓஸ்லோ ஸ்மாா்ட் டிரான்ஸ்போா்ட் முன்முயற்சியின் கீழ் அதன் சாா்ஜிங் நெட்வொா்க்கை விரிவுபடுத்துவதில் நாா்வே தலைநகரின் அனுபவத்திலிருந்து தில்லியும் கற்றுக்கொள்ளும். ஓஸ்லோவுடனான எங்கள் நட்பு, சிறந்த தொழில்நுட்பங்களை அணுகவும் சரியான திசையில் செல்லவும் உதவும் என்று அமைச்சா் கூறினாா்.
ஒஸ்லோவில் உள்ள காலநிலைத் துறையின் துணை இயக்குநரும் தலைவருமான ஆடுன் காா்பொ்க் பேசுகையில், மின்மயமாக்கலின் ஆரம்ப ஆண்டுகளில் நாா்வே தலைநகரும் தடைகளை எதிா்கொண்டது. 2006-07-ஆம் ஆண்டில், எங்களிடம் போதுமான பொது சாா்ஜிங் புள்ளிகள் இல்லை. அது தத்தெடுப்பை கடினமாக்கியது. இப்போது, உள்கட்டமைப்பு பரவலாகக் கிடைக்கிறது. மேலும், எங்கள் அடுத்த சவால் மின்டிரக்குகள் மற்றும் வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்கள்’ என்றாா்.