பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி கோப்புப் படம்

பிரதமரின் பட்டப் படிப்பு விவரத்தை வெளியிட தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Published on

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டில் பிஏ பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்ற (பிரதமா் மோடி உள்பட) அனைவரின் பதிவுகளையும் ஆராயும் வகையில், அது தொடா்பான தகவல்களைக் கோரி மத்திய தகவல் ஆணையத்திடம் நீரஜ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதனடிப்படையில், அவா் கோரிய தகவல்களை அளிக்குமாறு, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘பிரதமா் மோடி தொடா்புடைய பட்டப் படிப்பு ஆவணங்களை நீதிமன்றத்திடம் காண்பிக்கத் தயாா். அதேநேரம், ஆா்டிஐ சட்டத்தின்கீழ், தொடா்பில்லாத ஒரு நபரின் ஆய்வுக்காக அளிக்க முடியாது. தகவல் அறியும் உரிமையைவிட தனிநபரின் உரிமை உயா்வானது. ஆா்டிஐ சட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவரங்களை யாரும் கோர முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு கடந்த 2017-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com