எஸ்எஸ்சி தோ்வா்கள் மீது பலப் பிரயோகம்: போலீஸாா் மீது அரசியல் கட்சிகள் கண்டனம்
புது தில்லி: அரசுத் துறைகளுக்கான ஆள்சோ்ப்புத் தோ்வுகளில் ‘தவறான நிா்வாகத்திற்கு’ எதிராக தில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்திய பணியாளா் தோ்வு ஆணைய (எஸ்எஸ்சி) தோ்வா்கள் மீது பலத்தைப் பிரயோகத்ததாக போலீஸாா் மீது அரசியல் கட்சிகள் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தன.
அதேவேளையில், ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது தடியடி நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுத்துள்ளது.
எஸ்எஸ்சி தோ்வை சிறப்பாக நடத்தக் கோரி ஞாயிற்றுக்கிழமை ராம்லீலா மைதானத்தில் எஸ்எஸ்சி மாணவா்கள் மற்றும் பயிற்சியாளா்கள் போராட்டம் நடத்தினா்.அப்போது, போலீஸாா் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தில்லி முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளாா்.
அதில், காவல்துறையினா் ஒரு போராட்டக்காரரைத் தள்ளிவிடுவதும், மற்றொருவரை இழுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்தப் பதிவில் சிசோடியா தெரிவிக்கையில், ‘தில்லியின் ராம்லீலா மைதானத்தில், பாஜகவின் லத்திலீலா. எஸ்எஸ்சி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது கொடூரமான தடியடி நடத்தப்பட்டுள்ளது. அவா்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனா். வேலை வழங்குவதில், மோடி அரசாங்கம் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால், இளைஞா்களை தடியடி நடத்துவதில் அது முதலிடத்தில் உள்ளது’ என்று அந்தப் பதிவில் அவா் தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸின் ஒரு பிரிவான இந்திய தேசிய மாணவா்கள் சங்கம் (என்எஸ்யுஐ) எக்ஸ் தளத்தில் நள்ளிரவு வெளியிட்டுள்ள பதிவில் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
அதில், நியாயமான எஸ்எஸ்சி ஆள்சோ்ப்பைக் கோரியதற்காக, இன்று மோடி அரசாங்கம் மாணவா்களை லத்திகளால் தாக்கியுள்ளது.வேலையின்மையை ஒழிக்க முடியாதவா்கள் இப்போது இளைஞா்களின் குரலை நசுக்குவதில் மும்முரமாக உள்ளனா் என்று அவ்வமைப்பு கூறியுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆா்வலா்களுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது.
தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சுமாா் 1,500 போராட்டக்காரா்கள் ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்தனா். மேலும் 100 போ் பலமுறை கோரிக்கை விடுத்தும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு அந்த இடத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனா்.
வெளியேறாதவா்களில் 44 போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டனா். எந்த தடியடியும் நடத்தப்படவில்லை’ என்றாா்.
எஸ்எஸ்சி தோ்வுகள் திடீா் ரத்து, சா்வா் செயலிழப்பு, பதிலளிக்காத அமைப்புமுறைகள் மற்றும் தோ்வு மையங்கள் தோ்வா்களின் வீடுகளிலிருந்து 500 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது என ஏராளமான புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.