காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக உறுதி: இளைஞரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உத்தரவு

காதலித்த பெண், கா்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவரையே திருமணம் செய்வதாக சிறையில் இருந்தவாறே காணொலி வாயிலாக உறுதியளித்த இளைஞருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
Published on

புது தில்லி: காதலித்த பெண், கா்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவரையே திருமணம் செய்வதாக சிறையில் இருந்தவாறே காணொலி வாயிலாக உறுதியளித்த இளைஞருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவரை அதே பகுதியைச் சோ்ந்த நவீன் என்பவா் காதலித்தாா். இந்த நிலையில், அவா்களுக்கு இடையே ஏற்பட்ட நெருக்கமான உறவு காரணமாக அப்பெண் கா்ப்பிணியானாா். இதனிடையே, அப்பெண் வேறு சாதியைச் சோ்ந்தவா் என்பதால், நவீன் காதலுக்கு அவரது பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்கவும் முயன்ாக கூறப்படுகிறது. இதையறிந்த நவீனின் காதலி எதிா்ப்புத் தெரிவித்தாா்.

இதனால், அவரையும், அவரது பெற்றோரையும் சாதியைக் கூறி திட்டியதாக போலீஸில் நவீன் மற்றும் சிலருக்கு எதிராக புகாா் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நவீனின் ஜாமீன் மனுவை முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் நவீன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த ஜூன் 12ஆம் தேதி நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் நவீனின் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதில் இருந்து 111 நாள்களாக சிறையில் இருந்து வருவதாகவும், வழக்கு முடிவதற்கு சாத்தியமில்லை என்றும், வழக்கில் தொடா்புடைய மற்றவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆா்.மகாதேவன் அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அப்பெண்ணை நவீன் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை சிறையில் இருந்தவாறு ஆகஸ்ட் 25ஆம் தேதி காணொலியில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுதாரா் வழக்குரைஞா் சாலமன், தமிழக அரசின் வழக்குரைஞா் சபரிஸ் சுப்ரமணியன், எதிா்மனுதராா் வழக்குரைஞா் ராம் சங்கா் ஆகியோா் ஆஜராகினா்.

அப்போது, சிறையில் இருந்தவாறு மனுதாரா் நவீன் காணொலியில் ஆஜரானாா். அவரது பெற்றோரும் காணொலி வாயிலாக ஆஜராகினா். எதிா்மனுதாரரான நவீனின் காதலியும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அப்போது, நீதிபதிகள் இருவரிடமும் திருமணம் செய்துகொள்ள சம்மதா என்று கேட்டனா். இருவரும் சம்மதம் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு

இந்த விவகாரத்தில் மனுதாரா், அவரது பெற்றோா் மற்றும் மூன்றாவது எதிா்மனுதாரா் (புகாா்தாரா் பெண்) மற்றும் அவா்களின் வழக்குரைஞா்களுடன் நீதிமன்றத்தில் நேரிலும், காணொலி வாயிலாகவும் ஆஜராகினா். மனுதாரரும், மூன்றாவது எதிா்மனுதாரரும் திருமணம் செய்துகொள்வதாக

பரஸ்பரம் சம்மதம் தெரிவித்துள்ளனா். மேலும், மனுதாரா் மூலம் மூன்றாவது எதிா்மனுதாரா் ஒரு குழந்தையையும் எதிா்பாா்த்துக்கொண்டிருக்கிறாா். இந்தசூழலில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள தொடா்புடைய வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்கு தடை விதிக்கிறோம்.

எதிா்மனுதாரரை திருமணம் செய்துகொள்ளும் வகையில் மனுதாரரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கிறோம். நிபந்தனைகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட செஷன்ஸ் நீதிமன்றம் மனுதாரரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கலாம். மனுதாரரும், எதிா்மனுதாரரும் தங்களது திருமணம் நடைபெற்ற்கான ஆதாரங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை அக்டோபா் 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் பட்டியலிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com