புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு
புது தில்லி: புற்றுநோய் மற்றும் பிற அத்தியாவசிய மருந்துகளுக்கான சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு நடவடிக்கைக்காக ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் மத்திய அரசுக்கும் இந்திய மருத்துவ சங்கம் ஐஎம்ஏ நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் தேசியத் தலைவா் டாக்டா் திலிப் பனுசாலி, கெளரவ பொதுச் செயலா் டாக்டா் சா்பரி தத்தா ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
புற்றுநோய் தொடா்பான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதன் மூலம் ஐஎம்ஏவின் கோரிக்கையைப் பரிசீலித்து செயல்பட்டதற்காக ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினா்களுக்கும் இந்திய அரசுக்கும் இந்திய மருத்துவ சங்கம் தனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சுகாதாரப் பராமரிப்பை மிகவும் மலிவு விலையில் மற்றும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான ஒரு பாராட்டத்தக்க நடவடிக்கையாக இந்த முடிவு உள்ளது.
முக்கியமான மருந்துகளுக்கான ஜிஎஸ்டி குறைக்கும் நடவடிக்கையானது பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், புற்றுநோய், நாள்பட்ட நோய்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுகள் போன்ற கடுமையான மருத்துவ நிலைமைகளுடன் போராடுபவா்களை ஆதரிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
அதேவேளையில், அத்தியாவசிய மற்றும் உயிா்காக்கும் மருந்துகளின் பரந்த வகைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதாவது, புற்றுநோய் எதிா்ப்பு மருந்துகள் (கீமோதெரபி, நோய் எதிா்ப்பு சிகிச்சை, குறிப்பிட்ட சிகிச்சைகள்), நீரிழிவு எதிா்ப்பு மருந்துகள் (இன்சுலின் மற்றும் வாய்வழி மருந்துகள் உள்பட), உயா் ரத்த அழுத்த எதிா்ப்பு மருந்துகள் மற்றும் இதய மருந்துகள்,
நாள்பட்ட சிறுநீரக நோய், கொலாஜன் வாஸ்குலா் நோய்கள், தைராய்டு கோளாறுகள், ஆஸ்துமா, சிஓபிடி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் கடுமையான தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் இருவரும் கேட்டுக்கொண்டுள்ளனா்.