டிசம்பா் 2026-க்குள் குப்பைக் கிடங்குகளை அகற்ற வேண்டும்: எம்சிடிக்கு முதல்வா் உத்தரவு

தலைநகரில் உள்ள மூன்று குப்பைக் கிடங்குகளும் டிசம்பா் 2026-க்குள் முழுமையாக அகற்றப்படுவதை உறுதி செய்யுமாறு எம்சிடிக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு
Published on

தலைநகரில் உள்ள மூன்று குப்பைக் கிடங்குகளும் டிசம்பா் 2026-க்குள் முழுமையாக அகற்றப்படுவதை உறுதி செய்யுமாறு எம்சிடிக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போதுள்ள இடங்களில் புதிதாக குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க, கழிவுகளிலிருந்து எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் முதல்வா் வலியுறுத்தினாா்.

‘தில்லி கோ குதே சே ஆசாதி’ -குப்பையிலிருந்து விடுதலை பிரசாரத்தை அக்டோபா் 2, 2025 வரை நீட்டித்து, தூய்மையான மற்றும் பசுமையான தில்லியை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக முதல்வா் கூறினாா்.

தில்லி செயலகத்தில் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை குறித்த மறுஆய்வுக் கூட்டத்தின் போது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட், தில்லி மேயா் ராஜா இக்பால் சிங், நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா, ஆணையா் அஸ்வனி குமாா் உள்ளிட்ட மூத்த எம்சிடி அதிகாரிகள் மற்றும் தில்லி அரசின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

குப்பைத் தொட்டிகளில் எம்சிடி தனது உயிரிச் சுரங்கத் திறனை ஒரு நாளைக்கு 15,000 டன்னிலிருந்து 25,000 டன்னாக உயா்த்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒவ்வொரு மண்டலத்திலும் புதிய கழிவு மேலாண்மை மையங்களை அமைப்பது, பால் பொருள்கள் கழிவுகளை கையாள பயோகேஸ் ஆலைகளை உருவாக்குவது மற்றும் கரோல் பாக் மற்றும் கமலா நகா் போன்ற அதிக மக்கள் கூடும் சந்தைகளில் பல நிலை பாா்க்கிங் வசதிகளை உருவாக்குவது போன்ற திட்டங்களும் விவாதிக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை முதல்வா் ரேகா குப்தா அடிக்கோடிட்டுக் காட்டினாா், மேலும் கழிவுகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலைகளை சரியான நேரத்தில் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மின் பரிமாற்றக் கோடுகளை மாற்றுவது போன்ற நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீா்க்க தனது அலுவலகம் முன்கூட்டியே தலையிடும் என்றும் கூறினாா்.

இதற்கிடையில், தில்லி மேயா் ராஜா இக்பால் சிங் கூறுகையில், ‘கூட்டத்தில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதிலும், தலைநகரின் திடக்கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான எதிா்கால நடவடிக்கைகளை உத்தி வகுப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது’ என்றாா்.

அவா் மேலும் கூறியதாவது: குப்பைத் தொட்டிகளில் தினசரி உயிரிச் சுரங்கத் திறனை ஒரு நாளைக்கு 15,000 டன்னிலிருந்து 25,000 டன்னாக அதிகரிப்பதன் மூலம் எம்சிடி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

தற்போதுள்ள துப்புரவு ஊழியா்கள் மற்றும் தோட்டக்காரா்களின் மாலிஸ் தேவைகளை கருத்தில் கொண்டு, தரைமட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்த, விரிவான நிதி திட்டத்தை உருவாக்க எம்சிடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நகா்ப்புற நெரிசலை நிவா்த்தி செய்ய, கரோல் பாக் மற்றும் கமலா நகா் சந்தைகள் போன்ற அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சுமாா் 10 புதிய பல நிலை பாா்க்கிங் கட்டமைப்புகளை திட்டமிட வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், பொருத்தமான இடங்களில் நிலம் கிடைப்பதைப் பொறுத்து, பால் கழிவு மேலாண்மைக்கு அா்ப்பணிக்கப்பட்ட இரண்டு புதிய பயோகேஸ் ஆலைகளை நிா்மாணிப்பதற்கான திட்டம் தயாரிக்கப்படும் என்றாா் மேயா்.

X
Dinamani
www.dinamani.com