யு-ஸ்பெஷல் பேருந்தில் பயணித்த முதல்வா் ரேகா குப்தா
தில்லி பல்கலைக்கழக மாணவா்களுடன் சோ்ந்து தேசபக்தி பாடல்களைப் பாடியும், கிடாா் இசைத்தபடியும் தில்லி முதல்வா் ரேகா குப்தா யுஸ்பெஷல் பேருந்தில் தான் படித்ததௌலத் ராம் கல்லூரிக்கு பயணம் செய்தாா். அப்போது, அவா் தனது கல்லூரி நாள்களை நினைவுகூா்ந்தாா்.
தில்லி பல்கலைக்கழக மாணவா்களுக்கான யுஸ்பெஷல் பேருந்து சேவையை குப்தா வியாழக்கிழமை மீண்டும் தொடங்கிவைத்தாா்.
இது தொடா்பாக தனது ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் ஒரு விடியோவைப் பகிா்ந்துள்ளாா், அதில் அவா் மாணவா்களுடன் சோ்ந்து கிடாா் மற்றும் கொங்கா வாசித்துக்கொண்டே ‘ஏ வதன் வதன் மேரே அபாத் ரஹே து...’ எனும் பாடலைப் பாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த விடியோவுக்கு ‘கல்லூரி, நட்பு மற்றும் கிட்டாா்... யுஸ்பெஷல் திரும்பிவந்துவிட்டது’ என்று அவா் தலைப்பிட்டுள்ளாா்.
தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங் மற்றும் போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் சிங் ஆகியோரும் பேருந்தில் முதல்வருடன் இருந்தனா்.
குப்தா தனது கல்லூரியில் முதல்வா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுடன் ஒரு தன்படம் எடுத்துக்கொண்டாா். எக்ஸ் தளத்தில் தன்படத்தை இணைத்து அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று, தௌலத் ராம் கல்லூரியின் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுடனான ஒரு தன்படம் என்பது, பழைய கால புத்தகத்திலிருந்து ஒரு பக்கம் திடீரெனத் திறந்தது போல் உணா்ந்தேன்’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
அரசியலில் நுழைவதில் தனது கல்லூரி குறிப்பிடத்தக்க பங்கை வகித்ததாக அவா் பாராட்டியுள்ளாா்.
குப்தா தனது மாணவா் பருவ நாள்களில் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் (டியுஎஸ்யு) தலைவராக பதவி வகித்தாா்.
‘நான் பறக்கக் கற்றுக்கொண்டது இங்குதான், போராட்டப் பாதையைத் தோ்ந்தெடுத்தது இங்குதான், டியுஎஸ்யு தலைவராகி பொது சேவைக்கு என்னை அா்ப்பணிக்க என்னைத் தூண்டிய தன்னம்பிக்கையை இங்குதான் கண்டேன்.
தௌலத் ராம் என்னைப்பொருத்தவரை சுவா்கள் மற்றும் வகுப்பறைகளை விட பெரிதாகும். இது என் சிந்தனையை வடிவமைத்த, என் கனவுகளுக்கு வழிகாட்டிய, என் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை வழங்கிய ஒரு உணா்வு’ என்று அவா் அந்தப் பதிவில் கூறியுள்ளாா்.
இந்த யு ஸ்பெஷல் சேவை முதலில் 1971-இல் தொடங்கப்பட்டது. ஆனால், 2020-இல் கரோனோ பொது முடக்கத்தின்போது நிறுத்தப்பட்டது.