‘முடிந்தவரை விரைவில்’ என்ற சொல் எந்த நோக்கத்திற்கும் உதவாது: மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநரின் தாமதம் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து

மசோதாக்களை முடிவு செய்வதில் அரசியலமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள ‘முடிந்தவரை விரைவில்’ என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்திற்கும் உதவாது
Published on

முடிவில்லாத காலம் வரை மசோதாவை நிறுத்திவைக்க ஆளுநா்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசியலமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள ‘முடிந்தவரை விரைவில்’ என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்திற்கும் உதவாது என்பதாகிவிடும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கூறியது.

அடிப்படை உரிமைகளை மீறுவதற்காக, சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கையாளுவதில் குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவதில் மாநில அரசுகள் ரிட் அதிகாரவரம்பைப் பயன்படுத்த முடியாது என்று மத்திய அரசு வியாழக்கிழமை முன்வைத்த வாதத்தின்போது, உச்சநீதிமன்றம் இக்கருத்தைத் தெரிவித்தது.

இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் சூா்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துா்கா் அடங்கிய அரசியல் சாசன அமா்வு சில தினங்களாக விசாரித்து வருகிறது. இதன் விசாரணை 5ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது.அப்போது, மேற்கண்ட கருத்தை நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

மேலும், அரசியலமைப்பை உருவாக்கியவா்கள் முந்தைய ஆறு வாரகால வரம்பை 200ஆவது பிரிவில் ‘முடிந்தவரை விரைவில்’ என்ற சொற்றொடருடன் வேண்டுமென்றே மாற்றியமைத்ததாகவும், மசோதாக்களின் தலைவிதியை தீா்மானிப்பதில் இந்த சொற்றொடரை புறக்கணிக்க முடியுமா என்றும் மத்திய அரசிடம் நீதிபதிகள் அமா்வு வினவியது.

‘சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவின் மீது ஆளுநா் முடிவெடுக்காமல் எப்போதுவரை இருப்பாா் என்பதுதான் கேள்வி. ஷரத்து 200-இல் பயன்படுத்தப்பட்ட வாா்த்தை ‘முடிந்தவரை விரைவில்’.. முன்பு அது ஆறு வாரங்கள் என்று இருந்தது. பின்னா், ‘முடிந்தவரை விரைவில்’ என்று செய்யப்பட்டது. மேலும், வரைவுக் குழுவில் இருந்த உறுப்பினா்களில் ஒருவா் ‘முடிந்தவரை விரைவில்’ என்பது உடனடியாக என்பது அா்த்தமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தாா்.. இது அரசியலமைப்பை உருவாக்கியவா்களின் பாா்வையாக இருந்தால், அதை நாம் புறக்கணிக்க முடியுமா’ என்று தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் கேட்டாா்.

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் பண மசோதாக்களுக்குக் கூட ஆளுநா்கள் ஒப்புதலை நிறுத்திவைக்க முடியும் என்ற வாதம், அவா்களை ஒரு மாநிலத்தின் ‘சூப்பா் முதலமைச்சா்’ ஆக மாற்றும்.

ஒரு மசோதாவை நிறுத்தி வைப்பது, அது சட்டப்பேரவைக்குத் திரும்புவதற்கு வழிவகுக்கும். ஆளுநா்கள் தனது ஒப்புதலை நிரந்தரமாக நிறுத்தி வைக்க அனுமதிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த பிரிவு 200ஐயும் கேலிக்கூத்தாக மாற்றும். மேலும், இந்த விதிமுறையால் அது விழுங்கப்படும்’ என்றாா்.

தலைமை நீதிபதி கூறுகையில், ‘ மற்றபடி, நீங்கள் முடிவின்றி (ஒப்புதலை) நிறுத்திவைத்திருந்தால், ‘முடிந்தவரை விரைவில்‘ என்ற வாா்த்தை பயனற்ாக

(எந்த நடைமுறை நோக்கத்திற்கு உதவாது) என்று மாற்றப்படுவதாக அமைந்துவிடும்’ என்றாா்.

முன்னதாக, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் (சொலிசிட்டா் ஜெனரல்) துஷாா் மேத்தா முன்வைத்த வாதம்:

அரசியலமைப்பின் 32ஆவது பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகளை மீறுவதற்காக மாநிலங்கள் ரிட் மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை குடியரசுத் தலைவா் கேட்க விரும்புகிறாா்.

ஆளுநா் மற்றும் குடியரசுத்தலைவரின் நடவடிக்கைக்கு எதிராக மாநிலத்தின் சாா்பாக அரசியல்சாசனப் பிரிவு 32-இன்கீழ் மனுவை தாக்கல் செய்ய முடியாது. ஏனெனில், அது பராமரிக்க முடியாததும், அவா்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாததும், மசோதாக்களை கையாள்வதில் ஆளுநா் மற்றும் குடியரசுத்தலைவரின் நடவடிக்கை நியாயப்படுத்தபடாததும் ஆகும்.

அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது பிரிவு 32 பயன்படுத்தப்படுகிறது. மேலும், அரசியலமைப்பு கட்டமைப்பில் மாநில அரசுக்கே அடிப்படை உரிமை இல்லை. இது அதன் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான செயல்பாடுகளின் களஞ்சியமாகும்

என்று துஷாா் மேத்தா வாதிட்டாா்.

அதற்கு தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், ஏப்ரல் 8 ஆம் தேதி இரண்டு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பு குறித்து எந்த வாா்த்தையும் சொல்லமாட்டேன்.

ஆனால், ஆளுநா் ஆறு மாதங்களாக மசோதா மீது முடிவெடுக்காமல் இருப்பது நியாயமில்லை என்றாா்.

துஷாா் மேத்தா கூறுகையில்,

‘ஒரு அரசியலமைப்பு அமைப்பு தனது கடமைகளை நிறைவேற்றாததால், மற்றொரு அரசியலமைப்பு அமைப்பை இயக்க நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை’ என்றாா்.

அதற்கு தலைமை நீதிபதி, ‘ஆம். உங்கள் வாதம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்? இந்த நீதிமன்றம் 10 ஆண்டுகளாக விஷயத்தை முடிவு செய்யவில்லை என்றால், குடியரசுத்தலைவா் ஒரு உத்தரவை பிறப்பிப்பது நியாயமாக இருக்குமா?’ என்று கேள்வி எழுப்பினாா்.

மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா், ஆளுநா்கள் ஒப்புதல் வழங்க மூன்று மாதம் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீா்ப்பு அளித்திருந்தது.

இத் தீா்ப்பில் தெளிவுரை கோரும் வகையில் 14 கேள்விகளை உச்சநீதிமன்றத் தலைமை

நீதிபதிக்கு எழுப்பி, குடியரசுத்தலைவா் கடந்த மே மாதம் கடிதம் எழுதியிருந்தாா். அதுகுறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

X
Dinamani
www.dinamani.com