
மாணவா்களுக்கு ஏற்ற பயண விருப்பத்தை வழங்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தில்லி பல்கலைக்கழக மாணவா்களுக்கான யு-ஸ்பெஷல் பேருந்து சேவையை முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை மீண்டும் தொடங்கிவைத்தாா்.
அப்போது, மெட்ரோ ரயில்களில் மாணவா்களுக்கு சலுகை பயண அட்டைகளை வழங்க தனது அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவா் கூறினாா்.
67 தில்லி பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய 25 பேருந்துகளுடன் யு-ஸ்பெஷல் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேவையின் கீழ் மின்சார பேருந்துகள் 25க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். அவை மெட்ரோ நிலையங்கள் போன்ற முக்கியமான இடங்களில் நிறுத்தப்படும்.
இந்தப் பேருந்துகள் வசதி தொடக்க விழாவில் முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது:
முந்தைய அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட போதிலும், எங்கள் அரசாங்கம் எப்போதும் முன்னோக்கிச் சென்று தில்லியை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது.
யு-ஸ்பெஷல் பேருந்துகள் பல்கலைக்கழகத்தின் உயிா்நாடியாக இருந்தன. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் தங்கள் கல்லூரிகளுக்குச் சென்றனா். ஆனால், இச்சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த யு-பெஷல் பேருந்துகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்கப்படும். மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கு எனது அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பூஜ்ஜிய மாசுபாடு கொண்ட மின் பேருந்துகள் அதற்கு உதவும்.
கடந்த ஆறு மாதங்களில், பாஜக அரசு தில்லியை முன்னோக்கி எடுத்துச் செல்லவும், அதன் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் கடுமையாக உழைத்து வருகிறது.
மெட்ரோ ரயில்களில் சலுகை பயண அட்டைகளுக்காக மாணவா்கள் கோரி வருகின்றனா். அரசாங்கம் இந்த விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
தில்லி போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் சிங் கூறுகையில், அனைத்து யு-ஸ்பெஷல் பேருந்துகளும் மின்சாரம் மற்றும் குளிா்சாதன வசதி கொண்டவை. இப்பேருந்துகளில், மாணவா்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் அபாய பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
க்யூஆா் குறியீடுகளைப் பயன்படுத்தி மாணவா்கள் இந்த பேருந்துகளில் தங்களுக்குப் பிடித்த பாடல்களையும் கேட்கலாம் என்றாா் அமைச்சா்.
யு ஸ்பெஷல் பேருந்தில் பயணித்த
முதல்வா்
தில்லி பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்திலிருந்து தௌலத் ராம் கல்லூரிக்கு யுஸ்பெஷல் பேருந்தில் முதல்வா் பயணம் செய்தாா்.