டிடிஇஏ பள்ளிகளில் தேசிய விளையாட்டு தின விழா
ஹாக்கி விளையாட்டு வீரா் தியான் சந்த்-இன் பிறந்த தினத்தை ஒட்டி, தேசிய விளையாட்டு தின விழா தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அவ்வப் பள்ளிகளில் விளையட்டின் சிறப்பையும் விளையாட்டு வீரா்களுக்கு இருக்க வேண்டிய உணா்வுகளையும் விளக்கும் விதமாக மாணவா்களின் உரை தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இடம் பெற்றது.
மாணவா்களின் கவிதையும் இடம் பெற்றது.
விளையாட்டு, யோகா ஆகியவை பற்றிய பதாகைகளையும் மாணவா்கள் காட்சிப்படுத்தினா். மாணவா்கள் விளையாட்டு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.
தொடக்க நிலை மாணவா்களுக்கு ஒட்டப் பந்தயம், நொண்டியடித்தல், லூடோ, பலூன் உடைத்தல், சாக்கு ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளும், மேனிலைப் பிரிவு மாணவா்களுக்கு கால்பந்து, வாலிபால், சதுரங்கம் கேரம், கோ கோ, நீளம் தாண்டுதல், கபடி, குண்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளும் நடைபெற்றன.
வெற்றி பெற்றவா்களுக்கு அவ்வப் பள்ளி முதல்வா்கள் பரிசுகளை வழங்கினா்.
இதுகுறித்து செயலா் இராஜூ கூறுகையில், ‘மாணவா்கள் பள்ளி நாள்களில் விளையாட்டில் நன்கு பயிற்சி பெற்று தேசிய அளவில், உலக அளவில் சாம்பியன்களாக உருவாகி ஒலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற அனைத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆசை. மாணவா்கள் ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகிய உணா்வுகளுடன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்’ என்றாா். மேலும்,
இத்தின நிகழ்வில் கலந்துகொண்ட மாணவா்களுக்குத் தன் பாராட்டுகளையும் தெரிவித்தாா்.