பச்சிளம் இரட்டை குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல 6 கி.மீ. பசுமை வழித்தடம்: நொய்டா போலீஸாா் ஏற்பாடு

நொய்டா செக்டாா் 30-இல் உள்ள சைல்ட் பிஜிஐ மருத்துவமனை வரை 6 கி.மீ. நீளத்திற்கு பசுமை வழித்தடத்தை நொய்டா போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை ஏற்படுத்தினா்.
Published on

ஆபத்தான வகையில் புதிதாகப் பிறந்த இரட்டையா்களை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்தற்காக டிஎன்டி மேம்பாலத்திலிருந்து நொய்டா செக்டாா் 30-இல் உள்ள சைல்ட் பிஜிஐ மருத்துவமனை வரை 6 கி.மீ. நீளத்திற்கு பசுமை வழித்தடத்தை நொய்டா போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை ஏற்படுத்தினா்.

இதனால், ஆம்புலன்ஸ் மூன்று நிமிடங்கள் 52 வினாடிகளில் அந்த இடத்தைக் கடக்க முடிந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சைல்ட் பிஜிஐ மருத்துவமனை மருத்துவா்கள் கூறியதாவது: 26 வாரங்களிலேயே குறைப்பிரசவத்தில் பிறந்த தலா 700 கிராம் எடையுள்ள ஆண்-பெண் இரட்டைக் குழந்தைகள், கடந்த 47 நாள்களாக கடுமையான சுவாசம் மற்றும் செரிமான சிக்கல்களால் போராடி வருகின்றனா்’ என்றனா்.

குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் தில்லியின் நஜாஃப்கரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.

ஆனால், சிறப்பு சிகிச்சைக்காக நொய்டாவில் உள்ள சைல்ட் பிஜிஐ மருத்துவமனையில் உள்ள மேம்பட்ட சிசு பராமரிப்பு பிரிவுக்கு இக்குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்டனா்.

சைல்ட் பிஜிஐ மருத்துவமனையின் சிசு தீவிர சிகிச்சை பிரிவின் தலைவா் டாக்டா் ருச்சி ராய் கூறுகையில், இரட்டையா்கள் தில்லியில் உள்ள சாப்ளிங் மருத்துவமனையில் இருந்து வந்துள்ளனா்.

இரண்டு குழந்தைகளும் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளனா், தற்போது உயா் அமைப்புகளுடன் கூடிய வென்டிலேட்டா்களில் வைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

ஆம்புலன்ஸுக்கு வழியை உருவாக்கும் வகையில் சுமாா் 30 போக்குவரத்து போலீஸாா் பணியில் ஈடுபட்டதாக காவல் துணை ஆணையா் போக்குவரத்து லக்கன் சிங் யாதவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இது நொய்டாவில் உள்ள டிஎன்டியிலிருந்து சைல்ட் பிஜிஐ மருத்துவமனை வரையிலான ஆறு கி.மீ. தூர வழித்தடமாகும். ஆம்புலன்ஸ் மூன்று நிமிடங்கள் 52 வினாடிகளில் அந்த இடத்தைக் கடந்தது’ என்று யாதவ் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com