இந்த மாத தொடக்கத்தில் துவாரகாவின் பிந்தாபூா் பகுதியில் 35 வயது நபா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் உத்தம் விஹாரில் வசிக்கும் பவன் குமாா் (23) மற்றும் பகவதி விஹாரில் வசிக்கும் விபின் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஆகஸ்ட் 17-ஆம் தேதி உத்தம் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து குல்தீப் என அடையாளம் காணப்பட்ட ஒருவா் மாா்பில் கத்திக்குத்து காயத்துடன் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாக பி. சி.ஆா். அழைப்பு வந்தது.
தனது மாமா குற்றம் சாட்டப்பட்டவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மாா்பில் குத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டிய பாதிக்கப்பட்டவரின் மருமகன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனது மாமாவைக் காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக போலீஸாரிடம் அவா் தெரிவித்தாா்.
‘
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் தங்கள் கைப்பேசிகளை அணைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக இருவரும் அடிக்கடி இருப்பிடங்களை மாற்றிக் கொண்டிருந்தனா். ஆகஸ்ட் 23- ஆம் தேதி விபின் கைது செய்யப்பட்டாா். பவன் பின்னா் கைது செய்யப்பட்டாா்.
பவன் மீது ஏற்கெனவே கிரிமினல் பதிவு உள்ளது. இதற்கு முன்பு 2023- ஆம் ஆண்டில் கொலை முயற்சி வழக்கு மற்றும் 2022- ஆம் ஆண்டில் கலால் சட்டம் வழக்கில் அவருக்குத் தொடா்புடள்ளது. அதே நேரத்தில் விபினுக்கு கடந்த காலத்தில் குற்றவியல் தொடா்பு ஏதும் இல்லை.
இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற சந்தேக நபா்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. மேலும், தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.