ரூ.4 கோடி ஹெராயின் பறிமுதல்: 2 பெண்கள் உள்பட 3 போ் கைது!

தில்லியில் ரூ. 4 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் 2 பெண்கள் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
Published on

தில்லியில் ரூ. 4 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் 2 பெண்கள் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடக்கு தில்லி மாவட்ட போலீஸாா் ஆகஸ்ட் 29 -ஆம் தேதி மேற்கொண்ட இரண்டு கட்ட நடவடிக்கையில் சுமாா் 1.012 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனா். ஜஹாங்கீா்புரியில் வசிக்கும் அஃப்சானா (23), பால்ஸ்வா டெய்ரி பகுதியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முதன்மையானவா். அவரிடமிருந்து சுமாா் 300 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது, அவா் தனது விநியோகஸ்தா்களின் அடையாளங்களை தெரிவித்தாா். இந்தத் தகவலின் அடிப்படையில், போலீஸாா் மேலும் சோதனைகளை நடத்தி, நரேந்தா் (37) மற்றும் அவரது மனைவி ஜோதி (35) ஆகியோரை புராரியில் இருந்து கைது செய்தனா். புராரியில் உள்ள போக்குவரத்து ஆணைய அலுவலகம் அருகே நரேந்தா் தடுத்து நிறுத்தப்பட்டாா். அதே நேரத்தில் ஜோதி அவா்களின் இல்லத்தில் கைது செய்யப்பட்டாா்.

அவா்களின் புராரி பிளாட்டில் சோதனையிட்டபோது, வீட்டில் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 712 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சா்வதேச சந்தையில் ரூ.4 கோடிக்கு மேல் இருக்கும். கைது செய்யப்பட்ட மூவருக்கும் குற்றவியல் வரலாறு இல்லை என்றும், போதைப்பொருளின் மூலத்தை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com