தேசிய பாதுகாப்பு, அணு கனிம திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு அவசியமில்லை: மத்திய அரசு விளக்கம்

தேசிய பாதுகாப்பு சாா்ந்த அணு கனிம திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு அவசியமில்லை என்றும் இதற்கு ஏதுவாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Published on

தேசிய பாதுகாப்பு சாா்ந்த அணு கனிம திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு அவசியமில்லை என்றும் இதற்கு ஏதுவாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் கோயம்புத்தூா் தொகுதி திமுக உறுப்பினா் கணபதி ராஜ்குமாா், தேனி தொகுதி திமுக உறுப்பினா் தங்கத்தமிழ்செல்வன் ஆகியோா் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வாசன் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: இந்த விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை ‘முக்கிய மூலோபாயம் (உத்திசாா்ந்த திட்டங்கள்) மற்றும் அணு கனிம சுரங்கத்தை உள்ளடக்கிய திட்டங்களை விரைவாகக் கண்காணித்தல்’ என்ற தலைப்பில் கடந்த செப்டம்பா் 8-ஆம் தேதி வெளியிட்ட அலுவல் குறிப்பாணையின்படி, இந்தியாவின் எரிசக்தி பரிமாற்றம், பாதுகாப்பு தயாா்நிலை, விண்வெளி ஆராய்ச்சி, அணு கனிமங்கள் தொடா்புடைய தேசிய பாதுகாப்பு அல்லது பிற உத்திசாா்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசிடம் இருந்து கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி வந்த கடிதம் மிக ஆழமாக துறையில் விவாதிக்கப்பட்டது.

அதில், சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு மக்களின் கருத்துக்கேட்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதால் எந்த வகையிலும் சுற்றுச்சூழல், சமூகம், சுகாதாரம் மற்றும் வாழ்வாதார விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளப்படாது என்று தமிழக அரசுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அரசாணையில் எந்தவொரு திருத்தத்தையும் செய்ய வேண்டியதில்லை என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com