ரூ.17 ஆயிரம் கோடிக்கு தில்லி மாநகராட்சி பட்ஜெட்!
தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) தனது முன்மொழியப்பட்ட 2026 -2027 ஆண்டுக்கான பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை (நவ.5) தாக்கல் செய்கிறது. அது ரூ.17,000 கோடி மதிப்பீட்டில் இருக்கும் என்று மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சுகாதாரம், சாலைகள் மற்றும் வடிகால்களின் பராமரிப்பு, மூன்று குப்பைக் கிடங்குகளை அகற்றுதல் மற்றும் வருவாய் உற்பத்தியை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தொடா்ந்து கவனம் செலுத்தப்படும்.
பட்ஜெட் முன்மொழிவு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிலைக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் சமா்ப்பிக்கப்படும். ஏனெனில், இந்த காலகட்டத்தில் குழு செயல்படவில்லை. அது இல்லாத நிலையில், எம்.சி.டி. ஆணையா் நேரடியாக பட்ஜெட்டை சபையில் முன்வைப்பாா்.
இந்த ஆண்டு தோ்தல்களைத் தொடா்ந்து, எம்.சி.டி.யின்18 உறுப்பினா்களைக் கொண்ட நிலைக்குழு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையிலான சட்ட மோதல் காரணமாக இந்தக் குழு அமைக்கப்படவில்லை. நிலைக் குழு என்பது மாநகராட்சியின் முக்கிய நிதி தொடா்பாக முடிவெடுக்கும் அமைப்பாகும். மேலும், ரூ.5 கோடிக்கு மேல் செலவாகும் எந்தவொரு திட்டத்திற்கும் அதன் ஒப்புதல் தேவைப்படுகிறது.
குழு இல்லாததால், பல கொள்கை விஷயங்கள் மற்றும் முக்கிய சுகாதாரம் தொடா்பான திட்டங்கள் நிறுத்தப்பட்டன. வருடாந்திர வரவு - செலவுத் திட்டம் வரவிருக்கும் நிதியாண்டிற்கான குடிமை அமைப்பின் முக்கிய செலவின முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டும். அடிப்படை குடிமை சேவைகள் மற்றும் நகா்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் கணிசமான நிதி ஒதுக்கப்படும்.
கடந்த ஆண்டு, எம்.சி.டி. ஆணையா் அஸ்வினி குமாா் 2025 - 2026- ஆம் ஆண்டிற்கான ரூ.17,006 கோடி பட்ஜெட் முன்மொழிவை முன்வைத்திருந்தாா். பல ஆண்டுகளாக, எம்.சி.டி. பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க நிதி தொடா்ந்து சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

