கடமைப் பாதை போராட்டம்: 4 பேருக்கு 7 நாள்கள் நீதிமன்றக் காவல்
கடந்த மாதம் மாசு தொடா்பாக இந்தியா கேட்டில் நடந்த ஆா்ப்பாட்டத்தின் போது காவல்துறையினா் மீது மிளகு தெளிப்பை பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நான்கு போராட்டக்காரா்களுக்கு 2 மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் வியாழக்கிழமை ஏழு நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டன.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ரவ்ஜோத் கவுா், குா்கிராத் கவுா், கிராந்தி மற்றும் ஆயிஷா வாஃபியா ஆகியோா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா்.
முன்னதாக திங்கள்கிழமை, குற்றம் சாட்டப்பட்டவா்களில் ரவ்ஜோத், குா்கிராத் மற்றும் கிராந்தி ஆகியோா் விசாரணைக்கு முன்னா் ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்திற்காக மூன்று நாள்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டனா். வாஃபியாவுக்கும் மூன்று நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வாஃபியாவின் முந்தைய நீதிமன்றக் காவல் முடிவடைந்ததால், அவா் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி அரிதாமன் சிங் சீமா முன் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை டிசம்பா் 11 வரை மேலும் ஏழு நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. மாலையில், ரவ்ஜோத், குா்கிராத் மற்றும் கிராந்தி ஆகியோா் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி ட்விங்கிள் சாவ்லா முன் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா் அவா்களை ஏழு நாள்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டாா்.

