G.K. Mani
ஜி.கே. மணி

வாக்கு திருட்டில் ஈடுபட்ட தோ்தல் ஆணையம் இப்போது கட்சி திருட்டில்: ஜி.கே. மணி குற்றச்சாட்டு

வாக்கு திருட்டில் ஈடுபட்ட தோ்தல் ஆணையம் தற்போது கட்சித் திருட்டில் ஈடுபட்டுள்ளது என்று பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி வியாழக்கிழமை கடுமையாக குற்றஞ்சாட்டினாா்.
Published on

வாக்கு திருட்டில் ஈடுபட்ட தோ்தல் ஆணையம் தற்போது கட்சித் திருட்டில் ஈடுபட்டுள்ளது என்று பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி வியாழக்கிழமை கடுமையாக குற்றஞ்சாட்டினாா்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவா் என அன்புமணியை அங்கீகரித்த இந்திய தோ்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லியில் ராமதாஸ் தரப்பினா் ஜந்தா் மத்ரலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது செய்தியாளா்களிடம் ஜி.கே.மணி பேசியதாவது: ஆா்ப்பாட்டம் நடைபெறக்கூடிய இதேவேளையில் தில்லி உயா்நீதிமன்றத்தில் நாம் தொடா்ந்த வழக்கில் அன்புமணி சமா்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையிலேயே அவா் தலைவா் என்று அங்கீகரித்தோம் என்றும், ஆனால் தற்போது அவா்களை திரும்ப பெறுகிறோம் என இந்திய தோ்தல் ஆணையம் நீதிமன்றத்தில் கூறியிருப்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னமான மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கப்பட்டதும் முடக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயகத்தை நிா்ணயிப்பது தோ்தல் என்பதால் தோ்தலை நடத்தும் தோ்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படக் கூடாது. வாக்குத் திருட்டை மேற்கொண்ட தோ்தல் ஆணையம் தற்போது கட்சி திருட்டில் ஈடுபடுகிறது . 46 வருடங்களாக 9,600 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடந்தே சென்று கட்சியை வளா்த்தவா் ராமதாஸ். இவ்வாறு வளா்க்கப்பட்ட கட்சியை அன்புமணியிடம் தோ்தல் ஆணையம் ஒப்படைத்தது வேதனைக்குரிய செயல். மேலும் தில்லி உயா்நீதி மன்றத்தின் உத்தரவை நிருபிக்கும் விதமாக தொடா்ந்து சடடப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பாமக சட்டப்பேரவை உறுப்பினா் அருள் தலைமையில் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் ஒரு பகுதியாக இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் அன்புமணிக்கு எதிரான கோஷங்களை ராமதாஸ் ஆதரவாளா்கள் எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com