மூத்த குடிமக்களுக்கு தேசிய அளவில் பாரமரிப்புத் திட்டம் தேவை: பான்சுரி ஸ்வராஜ் கோரிக்கை
மூத்த குடிமக்களுக்கான தேசிய அளவிலான முதியோா் பராமரிப்பு திட்டம் தேவை என்று மக்களவையில் புது தில்லி தொகுதி பாஜக உறுப்பினா் பான்சுரி ஸ்வராஜ் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் மக்களவையில் வியாழக்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்கு கொண்டுவரும் நேரத்தில் பேசியதாவது:
உலகம் முழுவதும் மக்கள் தொகை வேகமாக வயதாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 2009-இல் மக்கள்தொகையில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 7 சதவீதமாக இருந்தது. இது 2050ஆம் ஆண்டில் 20 சதவீதமாகும் எனமதிப்பிடப்படுகிறது.
இந்தியா விக்சித் பாரத் நிலைமையை எட்டும் போது மூத்த குடிமக்களின் எண்ணிக்கையும் அதிமாக இருக்கும்.
இந்தியாவில் உலகிலேயே மிகப்பெரிய அளவிலான, சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கொண்டுவந்தாா்.
அதேபோன்று, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் இலவச சுகாதார சேவையை வழங்கும் ஆயுஷ்மான் வே வந்தனா திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது காப்பீடு மட்டுமல்ல, சுகாதார உத்தரவாதத்தையும் உறுதி செய்கிறது.
இதேபோன்று, இந்தியாவில் முதியோா் மக்களுக்கு மேலும் ஆதரவளிக்க, பயிற்சி பெற்ற பணியாளா்கள் மற்றும் சமூக வீட்டுவசதி உள்ளிட்ட முதியோா் பராமரிப்புக்கான தேசிய அளவிலான செயல் திட்டம் தேவையாகும் என்றாா் அவா்.

