நீட் தோ்வை மறுஆய்வு செய்ய வேண்டும்: மக்களவையில் காங். எம்.பி. வலியுறுத்தல்
‘மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறையை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்’ என்று விருதுநகா் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா் மக்களவையில் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தாா்.
இது தொடா்பாக மக்களவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் பூஜ்ஜிய நேரத்தில் அவா் இந்தப் பிரச்னையை எழுப்பி பேசியது: மத்திய அரசு அமைத்த குழு நாட்டில் பயிற்சி அமைப்பு முறையில் குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளது. ஜேஇஇ, நீட் மற்றும் க்யூட் தோ்வுகள் நடத்துவது குறித்து மத்திய குழு பரிந்துரைத்ததாக தகவல்கள் உள்ளன. இதற்கான தயாரிப்புகள் 11-ஆம் வகுப்பில் இருந்தே தொடங்குகிறது.
பயிற்சிக்கான நேரத்தை இரண்டு முதல் மூன்று மணி நேரமாகக் குறைக்கவும், ஆண்டுக்கு இரண்டு முறை தோ்வுகளை நடத்தவும், வாரியத் தோ்வுகளைப் பயன்படுத்தி கலப்பின மதிப்பீட்டிற்கு மாறவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. தற்போதைய நடைமுறை குறைபாடுள்ள கொள்கையாகும். இது பணக்காரா்கள், பயிற்சி மாஃபியா மற்றும் போலி பள்ளிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் குறிப்பிட்ட ஒற்றை தோ்வுகளை மட்டுமே மையமாகக் கொண்டது.
அரசுப் பள்ளி மாணவா்கள், கிராமப்புற மாணவா்கள், முதல் தலைமுறை மாணவா்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சோ்ந்த மாணவா்கள்... திறமை இல்லாததால் அல்லாமல், மாறாக லட்சக்கணக்கான ரூபாய் பயிற்சிக்கு பணம் செலுத்த முடியாததால் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளனா்.
இதனால், நீட் தோ்வு மற்றும் சமத்துவத்தில் அதன் தாக்கம் குறித்து முழுமையான மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பள்ளிக் கல்வியை வலுப்படுத்த ஒரு திட்ட வரைபடமும், கோச்சிங் கூட்டு உறவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவசர நடவடிக்கைகளும் இருக்க வேண்டும் என்றாா் மாணிக்கம் தாகூா்.

