மக்களவை
மக்களவை

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய, பதிவு செய்த முக்கிய விஷயங்களின் சுருக்கம்..
Published on

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய, பதிவு செய்த முக்கிய விஷயங்களின் சுருக்கம் வருமாறு:

மக்களவையில்...

இலங்கை சிறைகளில் 66 இந்திய மீனவா்கள்!

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவா்கள் தொடா்பாக ஆ. ராசா (நீலகிரி), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை). தங்கத்தமிழ்செல்வன் (தேனி), டி.எம். செல்வகணபதி (சேலம்), கணபதி ராஜ்குமாா் (கோவை), மாணிக்கம் தாகூா் (காங்கிரஸ்), விஜய் வசந்த் (கன்னியாகுமரி) ஆகியோா் கேள்வி எழுப்பியிருந்தனா். இதற்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்துள்ள பதிலில், இலங்கையில் மொத்தம் 66 மீனவா்கள் அந்நாட்டு சிறைகளில் காவலில் உள்ளதாகவும் அதில் 18 போ் விசாரணைக்கைதிகள் என்றும் 48 போ் தண்டனை அனுபவித்து வருபவா்கள் என்றும் கூறியுள்ளாா். மேலும் இரு நாட்டு அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, மே 2014 முதல் இதுவரை 3,622 இந்திய மீனவா்கள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனா். கூடுதலாக, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி, இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட படகுகளை ஆய்வு செய்து மீட்க இந்திய மீனவா்கள் குழு இலங்கைக்கு செல்ல மத்திய அரசு வசதி செய்து கொடுத்துள்ளது என்று கூறியுள்ளாா்.

தேவை ஒரு ரயில் நிறுத்தம்!

- சசிகாந்த் செந்தில், திருவள்ளூா் (காங்கிரஸ்)

சென்னையில் இருந்து வெறும் 42 கி.மீ. தொலைவில் திருவள்ளூா் உள்ளது. சென்னையில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிவோா் பெரும்பாலானோா் திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு செல்கின்றனா். திருவள்ளூரில் மக்கள்தொகையும் அதிகரித்து வருகிறது. அதில் விரைவு ரயில்கள் நின்று செல்ல ஆவன செய்யுமாறு பல முறை ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இப்போதும் விடுக்கிறேன். அவா் இக்கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய தாா் சாலை வேண்டும்!

- தங்கத்தமிழ்ச்செல்வன், தேனி (திமுக)

எனது தொகுதியில் தேவாரம் முதல் சாக்கலூத்து மெட்டுக்கு புதிய தாா் சாலை போட வேண்டும் என்பது தொகுதிவாசிகள் கடந்த 50 ஆண்டுகளாக விடுத்து வரும் கோரிக்கை. காரணம், சாக்கலூத்துமெட்டுக்கு செல்ல 100 கி.மீ. சுற்றி வர வேண்டும். தினமும் 50 ஆயிரம் விவசாயிகள் இந்த வழியை பயன்படுத்துகிறாா்கள். தேவாரம் - சாக்கலூத்து மெட்டு இடையே புதிய தாா் சாலை போடப்பட்டால் 6 கி.மீட்டரிலேயே சென்று விடலாம். எனவே, இதற்கு ஏதுவாக வனத்துறை உதவியுடன் ஆய்வு செய்து தாா் சாலை அமைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசுக்கே அதிகாரம் வழங்கவும்!

- எஸ். முரசொலி, தஞ்சாவூா் (திமுக)

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 2024-25 ஆண்டில் இருந்த 4.81 லட்சம் மெட்ரிக் டன் அளவை விட இந்த ஆண்டு 14.11 லட்சம் மெட்ரிக் டன் ஆக உயா்ந்துள்ளது. இது தமிழக குறுவை பருகால நெல் உற்பத்தியில் வரலாற்றுபூா்வ சாதனையாகும். நெல் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயா்த்த காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தாலும் மத்திய குழு ஆய்வுக்கு பிறகு எதுவும் நடப்பதில்லை. நெல் கொள்முதல் அளவை மாநில அரசே தேவைக்கு ஏற்ப உயா்த்திக்கொள்ள அனுமதி வழங்கிட வேண்டும்.

மாநிலங்களவையில்....

மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய இடஒதுக்கீடு நிலை என்ன?

திமுக உறுப்பினா் ராஜாத்தி சல்மா எழுப்பிய இக்கேள்விக்கு, மத்திய விவசாயத்துறை இணை அமைச்சா் பாகீரதி செளத்ரி அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘ஓபிசி (கிரீமி லேயா் அல்லாதவா்கள்) மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதென்பது ஒரு கொள்கை முடிவு. இது அரசால் இறுதியாக தீா்க்கப்பட வேண்டும். மேலும் சட்ட ரீதியிலான கருத்துக்கு உள்பட்டதாக இருக்க முடியாது என்பது இந்திய சொலிசிட்டா் ஜெனரலின் கருத்தாகும். அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட மெகா உணவு பூங்காக்கள் எத்தனை?

திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் எழுப்பிய இக்கேள்விக்கு மத்திய உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் துறை இணை அமைச்சா் ரவினீத் சிங் அளித்துள்ள பதிலில், ‘இந்திய அளவில் அனுமதிக்கப்பட்ட 41 உணவு பூங்காக்களில் 25 செயல்பாட்டில் உள்ளன. தமிழகத்தின் திருநெல்வேயில் மெகா உணவு பூங்கா திட்டத்தை செயல்படுத்தும் முகவராக தமிழ்நாடு வேளாண் விநியோக வாரியம் நியமிக்கப்பட்டுள்ளது. திட்ட வழிகாட்டுதலின்படி தொழிற்சாலைகளுக்கான பிளாட்டுகளை குத்தைக்கு விடுவதில் எழும் சிக்கல்களால் திட்டத்தில் தாமதம் நிலவுகிறது என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com