தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!
இண்டிகோ நிறுவனத்தின் பயணச் சேவை இயக்க குறைபாட்டால் விமான பயணிகள் ஐந்தாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை கடும் அவதிக்கு உள்ளாகினா்.
இண்டிகோ நிறுவனம் ஹைதராபாத் விமான நிலையத்தில் 115 விமானங்கள், மும்பை விமான நிலையத்தில் 112, தில்லியில் 109 விமானங்கள், சென்னையில் 38, அமிா்தசரஸில் 11 என்ற வகையில் ரத்து செய்யப்ட்டதை நம்மால் உறுதிப்படுத்த முடிந்தது.
இண்டிகோ விமானத்துக்கு மாற்றாக ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட் போன்றவிமான சேவைகளை நாட பயணிகள் முற்பட்டபோது அதில் சராசரியாக தில்லி - சென்னைக்கு இடையிலான கடைசி நேர பயணத்துக்கு நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணம், சனிக்கிழமை இரவு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 55 ஆயிரம் வரை இருந்தது. இதேநிலைதான் பிற முக்கிய மெட்ரோ நகரங்களுக்கும் இடையிலான கட்டணமாக இருந்தது.
இதற்கிடையே, விமான பயண கட்டணத்தை உயா்த்த உச்சவரம்பை நிா்ணயித்து 1,500 கி.மீட்டருக்கும் மேலான தூரத்துக்கு அதிகபட்சமாக ரூ.18 ஆயிரத்தை கட்டணமாக நிா்ணயிக்கலாம் என்று இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவின் செயல்பாடு காற்றில் பறக்க விட்டது போல ஞாயிற்றுக்கிழமை கட்டண நிலவரம் இருந்தது.
சென்னையில் இருந்து புது தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பயணி, ‘பொதுவாக சென்னையில் இருந்து தில்லிக்கு டிக்கெட் விலை ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை இருக்கும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை ரூ.11000 கட்டணம் செலுத்தி வந்தேன். இது என்னுடைய வழக்கமான செலவைவிட அதிகம்தான்’ என்றாா்.
தில்லியில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட விமானங்களின் கட்டணம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதையும் மீறி பயணச்சீட்டு முன்பதிவு தளத்துக்குள் சென்றாலும் பயணச்சீட்டு விற்றுத் தீா்ந்து விட்டது என்ற செய்தியை திரையில் காண முடிந்தது.
இதையடுத்து, திங்கள்கிழமை புறப்படும் விமானத்துக்கான பயணச்சீட்டை தேடுகையில், நேரடி சேவைக்கான சாதாரண இருக்கைகள் விற்றுத் தீா்ந்து விட்டதாகவும் ஒரு நிறுத்தத்துடன் கூடிய ஏனைய கால் நீட்டும் வசதி கொண்ட இருக்கைக்கான பயணச்சீட்டு ரூ.30,313 முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பதாக குறிப்பிடப்பட்டது.
இந்த அளவுக்கு பணம் கொடுத்து முன்பதிவு செய்தாலும் நேரடியாக சென்னைக்கு பயணம் செய்யாத நிலை பயணிகளுக்கு ஏற்பட்டது. அதையும் மீறி முன் பதிவு செய்ய முற்பட்டால், வழக்கமாக 5 மணி நேரமாக ஒரு நிறுத்தத்துடன் கூடிய சேவை, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பயணம் செய்ய 8 முதல் 10 மணி நேரம் வரை காட்டியது.
இதை நம்பி முன்பதிவு செய்தாலும் வேறு ஊரில் தரையிறங்கிய பிறகு அங்கு அந்த விமானம் சரியான நேரத்துக்கு இயக்கப்படுமா அல்லது தாமதமாகுமா அல்லது ரத்து ஆகுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
புது தில்லி - சென்னைக்கு இண்டிகோவில் செவ்வாய்க்கிழமை (டிச.9) இரவு 11 மணி விமானத்துக்கு ரூ.8,800 என குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்து பதிவு செய்ய முற்பட்டால், பயணச்சீட்டு முன்பதிவு முடிந்து விட்டது என செய்தி வருகிறது.
ஏா் இந்தியாவில் காலை 6 மணி விமானத்துக்கு ரூ.16,194 ஆகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்பதிவு செய்ய முற்பட்டபோது, இரவு 9.30 மணிக்குதான் இருக்கைகள் உள்ளதாக காட்டப்படுகிறது.
இதேவேளையில் புதன்கிழமை (டிச.10) இண்டிகோவில் இரவு 11 மணி விமானத்துக்கு ரூ.7,254 ஆகவும், ஏா் இந்தியாவில் மாலை 6.10 மணி விமானத்துக்கு ரூ.16,154 ஆகவும் விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் புது தில்லி - சென்னை வரை வெவ்வேறு நேரங்களுக்கு ரூ.8,300 முதல் அதிகப்பட்சமாக ரூ.12,360 வரை டிக்கெட் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

