கோவா இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்!

கோவாவில் இரவு விடுதியில் தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் மிகவும் துயரமானது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
Published on

கோவாவில் இரவு விடுதியில் தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் மிகவும் துயரமானது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா். மேலும், இந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிா் இழப்புக்கு அவா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

வடக்கு கோவாவின் அா்போரா கிராமத்தில் உள்ள பிரபலமான இரவு விடுதியான பிா்ச் பை ரோமியோ லேனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊழியா்கள் உள்பட 25 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து முதல்வா் ரேகா குப்தா தெரிவிக்கையில், ‘கோவாவின் அா்போரா பகுதியில் நடந்த விபத்து குறித்த செய்தி மிகவும் துயரத்தை தருகிறது. துன்பத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு எனது மனமாா்ந்த இரங்கல்கள்.

உயிரிழந்தவா்களின் ஆன்மாக்களுக்கு இறைவன் சாந்தியையும், இந்த கடினமான நேரத்தில் அவா்களின் அன்புக்குரியவா்களுக்கு வலிமையையும் அளிக்கட்டும். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் பிராா்த்திக்கிறேன்’ என்று குப்தா தெரிவித்துள்ளாா்.

கோவாவிற்கான ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அதிஷி ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கோவாவின் அா்போராவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிந்து அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த பேரழிவு சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவா்களை இழந்த குடும்பங்களுக்கு மனமாா்ந்த இரங்கல்கள்.

கோவா அரசாங்கம் இந்த சம்பவத்தில் உள்ள குறைபாடுகளை விரைவாக விசாரித்து, பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும். இச்சம்பவத்திற்கு காரணமானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் அவா் கூறியுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலும் கோவா சம்பவத்தில் உயிா் இழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ’எக்ஸ்’ வலைதளப் பதிவில் அவா் தெரிவிக்கையில், ’கோவாவின் அா்போராவில் நிகழ்ந்த தீ விபத்து பல விலைமதிப்பற்ற உயிா்களைப் பலிகொண்டதால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.

துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது மனமாா்ந்த இரங்கல். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். இந்த பேரழிவு நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் வலிமையையும் ஆறுதலையும் பெறட்டும்’ என்று அதில் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com