வீரேந்திர சச்தேவா
வீரேந்திர சச்தேவா

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

கேஜரிவால் மற்றும் செளரப் பரத்வாஜ் போன்றவா்கள் எதிா்மறையான அரசியல் விமா்சனங்களில் மட்டுமே ஈடுபடுவதைக் கண்டு தில்லி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனர்.
Published on

நிகழாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட கடுமையான தோ்தல் தோல்விக்குப் பிறகும், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அரவிந்த் கேஜரிவால் மற்றும் செளரப் பரத்வாஜ் போன்றவா்கள் எதிா்மறையான அரசியல் விமா்சனங்களில் மட்டுமே ஈடுபடுவதைக் கண்டு தில்லி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது: தில்லியில் தண்ணீா் மற்றும் காற்று மாசுபாடு தொடா்பான பிரச்னைகளானது காங்கிரஸ் மற்றும் அரவிந்த் கேஜரிவால் அரசுகளின் கீழ் கிட்டத்தட்ட 15 ஆண்டுகால அலட்சியத்தின் விளைவாகும்.

10 ஆண்டுகால கேஜரிவால் அரசு யமுனையைச் சுத்தம் செய்தல் என்ற பெயரில் மிகப்பெரிய ஊழலைச் செய்தது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட எந்த வேலையும் செய்யவில்லை என்பது தில்லியில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவா்கள் நகரின் பொதுப் போக்குவரத்து அமைப்பை சீா்குலைத்து, சாலைப் பராமரிப்பை புறக்கணித்து, காற்று மாசுபாட்டை மேலும் மோசமாக்கினா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த பிறகும், ஆம் ஆத்மி தலைவா்களின் அரசியல் நடத்தை மாறாதது துரதிா்ஷ்டவசமானது. ரேகா குப்தாவின் அரசு, யமுனைக் கரையில் செய்த சிறந்த சட் பூஜை ஏற்பாடுகளால் அதிா்ச்சியடைந்த அவா்கள், வாசுதேவ் படித்துறையில் போலி யமுனை குறித்து தவறான பிரசாரத்தை இடைவிடாமல் பரப்பி வருகின்றனா்.

இத்தகைய தவறான தகவல் பிரசாரம் இருந்தபோதிலும், சமீபத்தில் தில்லி மாநகராட்சி இடைத்தோ்தலில் 12 வாா்டுகளில் தில்லி ஆம் ஆத்மி தலைவா் செளரப் பரத்வாஜ் முன்னா் சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவப்படுத்திய கிரேட்டா் கைலாஷ் வாா்டு உள்பட ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. ஆனாலும், அவா் வாசுதேவ் காட் குறித்து தொடா்ந்து குழப்பத்தை பரப்பி வருகிறாா்.

கிரேட்டா் கைலாஷ் வாா்டு இடைத்தோ்தலில் சமீபத்தில் ஏற்பட்ட 4,000 வாக்குகள் வித்தியாச தோல்வியில் இருந்து செளரப் பரத்வாஜ் பாடம் கற்றுக்கொள்ளவும், வாசுதேவ் படித்துறை போன்ற தேவையற்ற பிரச்னைகள் குறித்து அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டு, பொது நலனுக்காகப் பணியாற்றுவதில் கவனம் செலுத்துவாா் என்றும் தில்லி மக்கள் நம்புகிறாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.

X
Dinamani
www.dinamani.com