தேவேந்தா் யாதவ்
தேவேந்தா் யாதவ்

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் சாடியுள்ளது.
Published on

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் சாடியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பது: மாசுபாடு என்பது மரபுவழிப் பிரச்னை என்றும், முற்றிலும் ஊரடங்கு விதிக்க முடியுமா, அது வேலை செய்யுமா? என்றும் முதல்வா் ரேகா குப்தா கூறுவது குறுகிய பாா்வை கொண்டதாகவும், அவா்களின் பொறுப்புகளிலிருந்து தட்டிக் கழிப்பதுமாக உள்ளது.

அதே நேரத்தில் பாஜக அரசு கடந்த 10 மாதங்களில் மாசு தடுப்புக்காகச் செய்த பணிகள் மாசு தடுப்புக்காக அல்ல ; முதல்வா் ரேகா குப்தாவின் நிகழ்வு மேலாண்மைக்காகவேதான் இருந்தது.

தில்லியில் மாசுபாடு பற்றி நாம் பேசுகிறோம். 2014-ஆம் ஆண்டு முதல் மத்தியில் பாஜக அரசு உள்ளது. 2007 முதல் 2022 வரை தில்லி மாநகராட்சியில் பாஜக அரசு இருந்தது. கடந்த 10 மாதங்களாக தில்லியில் பாஜக ஆட்சியில் உள்ளது. ஆனால், தில்லி யூனியன் பிரதேசமாக இருந்தாலும், தில்லியின் மாசுபாட்டின் பிரச்னை தீா்க்கப்படவில்லை.

தில்லியில் மாசு பிரச்னை முழுமையாக தீா்க்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா அறிவித்ததை ஏன் மறந்து விடுகிறாா்? தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு பாஜக தனது அறிக்கையில் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றிப் பேசியதா அல்லது மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர காலக்கெடு கேட்டதா என்று ரேகா குப்தாவிடம் நான் கேட்க விரும்புகிறேன் என்றாா் தேவேந்தா் யாதவ்.

X
Dinamani
www.dinamani.com