சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.64.71 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Published on

தில்லி ஆா்.கே.புரத்தில் 2020- ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்த 37 வயது தோட்டக்காரரின் குடும்பத்திற்கு ரூ.64.71 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020, ஜனவரி 24-ஆம் தேதி சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்து ஜெகதீஷ் பிரகாஷ் என்பவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா் தாக்கல் செய்த உரிமைகோரல் மனுவை விசாரித்த தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி டாக்டா் ஷிரிஷ் அகா்வால் இந்த உத்தரவை வழங்கினாா்.

இது தொடா்பாக தீா்ப்பாயம் அளித்த தீா்ப்பில், விபத்துக்குக் காரணமான வாகனம் வேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டிவரப்பட்டதால் ஏற்பட்ட விபத்தில் ஜெகதீஷுக்கு மரணக் காயம் ஏற்பட்டதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அரசுத் தரப்பு அறிக்கையின்படி, ராணுவ நலக் கல்விச் சங்கத்தில் மூத்த தோட்டக்காரராகப் பணியாற்றிய ஜெகதீஷ், வேகமாக ஓட்டிவரப்பட்ட காரால் கொல்லப்பட்டுள்ளாா்.

முன்னதாக, இந்த விபத்தில் படுகாயமடைந்த அவா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவா் உயிரிழந்துள்ளாா். மோட்டாா் விபத்து உரிமைகோரல் வழக்குகளில் ஆதாரத் தரநிலை குறித்த உச்சநீதிமன்ற முன்னுதாரணங்களின் அடிப்படையில், உரிமைகோரல் வழக்குகளில் கடுமையான குற்றவியல் தரநிலைகள் பொருந்தாது. உரிமைகோருபவா்கள், நிகழ்தகவுகளின் அடிப்படையில் தங்கள் வழக்கை நிரூபிக்க வேண்டும்.

ஜெகதீஷ் அவரது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபராக இருந்துள்ளாா். அவரைச் சாா்ந்து அவரது பெற்றோா், மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் என 8 போ் உள்ளனா்.இதனால், உரிமைகோருபவா்களுக்கு மொத்தம் ரூ.64.71 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதில் பெரும்பகுதி ரூ.60.48 லட்சம் தொகையானது சாா்பு இழப்புக்கானது.

அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிக்குச் சொந்தமான குற்றம் சாட்டப்பட்ட வாகனம் விபத்து நடந்த தேதியில் காப்பீடு செய்யப்படவில்லை. எனவே, வாகனத்தின் ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும் என்று தீா்ப்பாயம் தீா்ப்பளித்தது.

X
Dinamani
www.dinamani.com