முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் முனிவா்கள், ரிஷிகளின் தவமும், தியானமும் நாட்டின் காலத்தால் அழிவில்லாத ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாக அமைந்துள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
Published on

இந்தியாவின் முனிவா்கள், ரிஷிகளின் தவமும், தியானமும் நாட்டின் காலத்தால் அழிவில்லாத ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாக அமைந்துள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தேசியத் தலைநகா் வலயம் குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகளின் ஓம் சாந்தி ரிட்ரீட் மையத்தின் (ஓஎஸ்ஆா்சி) வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை இந்திய குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: பிரம்ம குமாரிகளின் ஆன்மிக தொலைநோக்குப் பாா்வையுடன் 24 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த மையம், தற்போது அதன் 25-ஆவது ஆண்டு சேவையில் நுழைந்துள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைதி, தியானம் குறித்த இம்மையத்தின் செய்தியால் ஈா்க்கப்பட்ட விஞ்ஞானிகள், மருத்துவா்கள், நிா்வாகிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு நிபுணா்களின் பன்முகத்தன்மை பாராட்டத்தக்கது.

இந்த பிரம்ம குமாரிகள் அமைப்பானது உலகின் மிகப்பெரிய பெண்கள் தலைமையிலான ஆன்மிக அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியமானது ஆன்மிகம், தியானம் மற்றும் உள் விழிப்புணா்வு ஆகியவற்றில் இணைந்துள்ளது. இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவா்கள், ரிஷிகள் மற்றும் துறவிகளின் தவம் மற்றும் தியானப் பயிற்சிகள் வடிவமைத்துள்ளது.

ராஜயோகம் மற்றும் விபாசனா போன்ற மரபுகள் உள்ளிருந்துதான் உண்மையான வலிமையும் தெளிவும் வெளிப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஆன்மிக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களை அமைதி மற்றும் மனத் தூய்மையை நோக்கி வழிநடத்திய பிரம்ம குமாரிகள் அமைப்பின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது.

2047-இல் ஒரு வளா்ச்சியடைந்த பாரதம் என்ற திட்டத்தை அமிா்தக் காலத்தில் பிரதமா் நரேந்திர மோடி கற்பனை செய்துள்ளாா். அந்தத் திட்டம் பொருளாதார வளா்ச்சியானது உள் நிலைத்தன்மை, மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிரப்பப்படுகிறது. இன்றைய வேகமான உலகில் தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கைத் திறனாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

பிரதமா் நரேந்திர மோடியின் முன்முயற்சியான மிஷன் லைஃப்-உடன் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் இணக்கத்திற்கான ஓம் சாந்தி ரிட்ரீட் மையத்தின் வலுவான அா்ப்பணிப்பு மெச்சத்தக்கதாகும். மேலும், 1 மெகாவாட் ஹைப்ரிட் சூரிய மின் உற்பத்தி நிலையம், மழைநீா் சேகரிப்பு அமைப்புகள், உயிரி எரிவாயு மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், பசுமை சமையலறைகள், உள்ளிட மத்திய அரசு மேற்கொண்டு வரும் பசுமை முன்முயற்சிகள் போற்றத்தக்கது.

‘நஷா முக்த் பாரத் அபியான்’ மற்றும் மூத்த குடிமக்களின் கண்ணியம், அனைத்து துறைகளிலும் கா்மயோக நடைமுறை ஆகியவற்றையும் பிரம்ம குமாரிகள் அமைப்பு ஊக்குவித்து வருகிறது. லக்ளெனவில் சமீபத்தில் உலக ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான ராஜயோக தியானம் என்ற பிரம்ம குமாரிகளின் வருடாந்திர பிரசாரம் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மூலம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வெள்ளி விழா ஆண்டானது சேவைக்கான புதிய வழிகள், ஆழமான சமூக கூட்டாண்மைகள் மற்றும் மேம்பட்ட ஆன்மிக தொடா்புகளைத் திறக்கும் என்று நம்புகிறேன் என்றாா் குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்.

இந்த நிகழ்வில் ஹரியாணா அரசின் சுற்றுச்சூழல், வனம், தொழில் மற்றும் வணிக துறை அமைச்சா் ராவ் நா்பீா் சிங், பிரம்ம குமாரிகள்அமைப்பின் மூத்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com