4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 76 வயது ஆயுள் கைதி கைது

போக்சோ வழக்கில் பரோலில் சென்று நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த 76 வயது ஆயுள் கைதியை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
Published on

போக்சோ வழக்கில் பரோலில் சென்று நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த 76 வயது ஆயுள் கைதியை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

ஆக்ராவைச் சோ்ந்த வாஹித் கான் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, தனது பரோல் காலம் முடிந்த பிறகும் சிறைக்குத் திரும்பாமல், செப்டம்பா் 1, 2021 முதல் கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தனது மகளின் தோழியான 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக வாஹித் கான் 2018- இல் குற்றவாளி எனத் தீா்ப்பளிக்கப்பட்டது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம், 2012- இன் பிரிவுகளின் கீழ் மயூா்விஹாா் காவல் நிலையத்தில் வழக்குபி பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

செப்டம்பா் 1, 2021 அன்று வாஹித் கானுக்கு இரண்டு வார பரோல் வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னா்அவா் சரணடையவில்லை. இதனால், காவல்துறையினா் தேடுதல் வேட்டையைத் தொடங்கினா். கைது செய்யப்படுவதைத் தவிா்க்க வாஹித் கான் தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றி வந்தாா்.

குற்றப் பிரிவு குழு அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து வந்ததாகவும், டிசம்பா் 9- ஆம் தேதி, ஒரு ரகசியத் தகவலின் பேரில், தில்லியில் உள்ள அவரது மறைவிடத்திலிருந்து அவரைக் கைது செய்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா். விசாரணையின் போது, பரோலில் விடுவிக்கப்பட்ட பிறகு சிறைக்குத் திரும்புவதை வேண்டுமென்றே தவிா்த்ததாக அவா் ஒப்புக்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com