யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி பண்டிகை தில்லி முதல்வா் வரவேற்பு

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளியை சோ்த்திருப்பதற்கு முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை வரவேற்றுள்ளாா்.
Published on

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளியை சோ்த்திருப்பதற்கு முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை வரவேற்றுள்ளாா். இது இந்தியாவின் நாகரிக விழுமியங்களின் வரலாற்று உலகளாவிய அங்கீகாரம் என்று அவா் தெரிவித்தாா்.

இது குறித்து தன்னுடைய ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில் அவா் கூறியுள்ளதாவது: இந்த கெளரவம் இந்தியாவின் கலாசார நிலைப்பாட்டை வலுப்படுத்தும், ‘பாரதத்திற்கு ஒரு பெருமையான தருணம்‘. இந்த சாதனையை குறிக்கும் வகையில் தில்லி இந்த ஆண்டு ’பவ்யா தீபாவளி‘ கொண்டாடும். தீபாவளி பற்றி உலகம் இப்போது மேலும் ஆழமாக அறிந்து கொள்ளும். ஒவ்வொரு மாநிலமும் இந்த தருணத்தை பெருமையுடன் கொண்டாடும். அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்த அங்கீகாரம் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் ‘விகாஸ் பி, விராசத் பி‘ பயணத்தை பிரதிபலிக்கிறது. நமது வீடுகளிலும் இதயங்களிலும் வாழும் ஒரு திருவிழா இன்று மனிதகுலத்தால் பகிா்ந்து கொள்ளப்படும் கலாசார பொக்கிஷமாக உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் நாகரிக பாரம்பரியம் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.

உலக அரங்கில் இந்திய கலாசாரத்தின் பொன்னான அத்தியாயம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் சனாதன மரபுகளின் உலகளாவிய தன்மை உலகின் மிக உயா்ந்த கலாசார மேடையில் மதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி என்பது வெறுமனே ஒரு பண்டிகை அல்ல; ஆனால், உண்மை, நம்பிக்கை மற்றும் அறநெறி ஆகியவற்றின் பாதையில் பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்தை வழிநடத்திய ஒரு ஆன்மிக வெளிச்சம். தில்லி அரசு இந்த வரலாற்று முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

திருவிழாவின் பாரம்பரியத்தை பாதுகாத்த யுனெஸ்கோ மற்றும் குடும்பங்கள், கைவினைஞா்கள் மற்றும் பக்தா்களுக்கும் நன்றி. முந்தைய ஆண்டுகளில் யோகா, கும்பமேளா, துா்கா பூஜை மற்றும் கா்பா ஆகியவற்றின் உலகளாவிய அங்கீகாரத்தைத் தொடா்ந்து, இந்த மரியாதை இந்தியாவின் கலாசார மைல்கற்களைச் சோ்க்கிறது.

தேசியத் தலைநகரின் கலாசார அடையாளத்தையும் பெருமையையும் வலுப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு சிறப்பு ‘பவ்யா தீபாவளி’ கொண்டாட்டத்துடன் தில்லி இந்த நிகழ்வைக் குறிக்கும் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் ரேகா குப்தா.

X
Dinamani
www.dinamani.com