கேளிக்கை விடுதி தீ விபத்து: உரிமையாளரை கோவா அழைத்து செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி!
கோவாவில் டிசம்பா் 6-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 25 போ் உயிரிழந்த பிா்ச் பை ரோமியோ லேன் இரவு கேளிக்கை விடுதியின் நான்கு உரிமையாளா்களில் ஒருவரான அஜய் குப்தாவை கோவா அழைத்து சென்று விசாரிக்க காவல்துறைக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.
கோவாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக அஜய் குப்தா தில்லியில் பிடிபட்டாா். இதையடுத்து, கோவா போலீஸாா் அவரை கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி வினோத் ஜோஷி முன் ஆஜா்படுத்தி, அவரை விசாரணைக்காக கோவா அழைத்து செல்வதற்கான போக்குவரத்து காவல் கோரினா்.
இண்டிகோ விமானங்கள் தடைபட்டதால் விமானப் பயண நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், நீதிமன்றம் அஜய் குப்தாவை கோவா அழைத்து செல்ல 36 மணி நேர போக்குவரத்து காவல் அனுமதி அளித்தது. குப்தாவின் முதுகெலும்பு காயம் மற்றும் பிற மருத்துவ பிரச்னைகள் காரணமாக சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், காவலின் போது சரியான நேரத்தில் மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: முன்னதாக, கோவா போலீஸ் குழு அஜய் குப்தாவை அவரது தில்லி இல்லத்தில் கண்டுபிடிக்க முடியாததால் அவருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்தது. எனினும், பின்னா் நாங்கள் அவரை தில்லியில் பிடிக்க முடிந்தது. மேலும், கோவாவிற்கு அழைத்து செல்தற்கான சம்பிரதாயங்கள் முடிந்ததும் அஜய் குப்தா கைது செய்யப்படுவாா்.
கோவாவின் அா்போராவில் அமைந்துள்ள இரவு விடுதியின் இரண்டு முதன்மை உரிமையாளா்களான சௌரப் லுத்ரா மற்றும் கௌரவ் லுத்ரா கடந்த டிசம்பா் 6- ஆம் தேதி இரவு நடந்த துயரத்தைத் தொடா்ந்து தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு தப்பிச் சென்ாக சந்தேகிக்கப்படுகிறது. அவா்களுக்கு எதிராக இன்டா்போல் ப்ளூ காா்னா் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு விடுதியின் மற்றொரு உரிமையாளரான பிரிட்டிஷ் குடிமகனான சுரிந்தா் குமாா் கோஸ்லாவுக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விடுதியின் தலைமைப் பொது மேலாளா் ராஜீவ் மோடக், பொது மேலாளா் விவேக் சிங், பாா் மேலாளா் ராஜீவ் சிங்கானியா, கேட் மேலாளா் ரியான்ஷு தாக்கூா் மற்றும் ஊழியா் பாரத் கோஹ்லி ஆகிய ஐந்து பேரை போலீஸாா் இதுவரை கைது செய்துள்ளனா்.
டிசம்பா் 6 ஆம் தேதி நள்ளிரவில் வடக்கு கோவாவின் அா்போராவில் உள்ள பிா்ச் பை ரோமியோ லேன் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருபத்தைந்து போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

