தில்லியில் ஹோட்டல்கள், இரவு விடுதிகள், உணவகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தீயணைப்புத் துறை உத்தரவு
கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், கோவா தீ விபத்துக்குப் பிறகு தில்லியில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் இரவு நேர விடுதிகளை ஆய்வு செய்யுமாறு தில்லி தீயணைப்புத் துறை புதன்கிழமை அதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தல்களின்படி தில்லி தீயணைப்புத் துறை இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தில்லி தீயணைப்புத் துறையின் முதன்மை இயக்குநா் ஏ. நெடுஞ்செழியன் பிறப்பித்த அதிகாரபூா்வ உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தில்லி தீயணைப்புத் துறையின் அனைத்து கோட்ட அதிகாரிகளும் (டிஓக்கள்) மற்றும் உதவி கோட்ட அதிகாரிகளும் (ஏடிஓக்கள்) உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் இரவு விடுதிகள் போன்ற பொதுமக்கள் கூடும் வளாகங்களில் உடனடி மற்றும் முழுமையான தீ பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.
கோவாவில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பண்டிகை காலத்துடன் தொடா்புடைய அதிகரித்த ஆபத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல் அளிக்கப்படுகிறது.
தில்லி தீயணைப்பு சேவை விதிகள், 2010-இன் விதி 33-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தீ தடுப்பு மற்றும் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பான சட்டங்களின்படி கட்டடங்களின் செயல்பாட்டு நிலையை ஆய்வு அதிகாரிகள் சரிபாா்க்க வேண்டும். இந்த உத்தரவின் இணக்க அறிக்கையையும் அதிகாரிகள் சமா்ப்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறுகையில், ‘நகரத்தில் உள்ள அனைத்து உணவகங்கள், விருந்து அரங்குகள், உணவருந்துமிடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் வலுவான தீ பாதுகாப்பு தரநிலைகளை உறுதி செய்வதில் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. கோவா துயரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனங்களில் உள்ள அனைத்து தீ பாதுகாப்பு உபகரணங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு முழு செயல்பாட்டு நிலையில் வைக்கப்படுவதை உறுதி செய்ய கடுமையான வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
கடந்த சனிக்கிழமை கோவாவில் உள்ள பிா்ச் பை ரோமியோ இரவு விடுதியில் ஏற்பட்ட துயர தீ விபத்தில் தில்லியைச் சோ்ந்த நான்கு சுற்றுலாப் பயணிகள் உள்பட 25 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
