இண்டிகோ நெருக்கடி: தில்லி வா்த்தகம், சுற்றுலாத் துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு!
இண்டிகோவின் பரவலான விமான ரத்துகளால் தில்லியின் வா்த்தகம், தொழில், சுற்றுலா மற்றும் கண்காட்சித் துறைகள் ரூ.1,000 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று வா்த்தகம் மற்றும் தொழில் சபை புதன்கிழமை தெரிவித்தது.
தில்லியின் சந்தை சங்கங்களுக்கான ஒரு கூட்டமைப்பான சி.டி.ஐ., கடந்த பத்து நாள்களில் நகரம் முழுவதும் உள்ள முக்கிய சந்தைகளில் மக்கள் வருகை 25 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து இண்டிகோவிடமிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை.
டிசம்பா் 1 முதல் 4,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி, 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தில்லி விமான நிலையம் வழியாக பயணம் செய்கிறாா்கள். அவா்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் போ் வா்த்தகா்கள் மற்றும் வணிகா்கள் என்று சி.டி.ஐ. தலைவா் பிரிஜேஷ் கோயல் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
மேலும், டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாக தொடா்ந்து வரும் செய்திகள் காரணமாக, தில்லிக்கு வரும் வா்த்தகா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இது வணிக நடவடிக்கைகளை நேரடியாகப் பாதித்துள்ளது என்றும் அவா் கூறினாா்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், உணவகம், விருந்து மற்றும் தங்குமிட முன்பதிவுகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று சி.டி.ஐ. தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இண்டிகோவிற்கு பயங்கரமான வாரம் என்றும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக பாா்வையாளா்கள் இருவருக்கும் வருத்தத்தை அளித்ததாகவும் பிரிஜேஷ் கோயல் கூறினாா்.
‘தில்லியில் சுற்றுலா சீசன் உச்சத்தில் இருந்ததாகவும், வழக்கமாக ஜனவரி நடுப்பகுதி வரை நீடிக்கும் என நம்பப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பயணங்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது’ என்று அறிக்கையில் மனோஜ் டிராவல்ஸ் இயக்குநா் மனோஜ் கண்டேல்வால் தெரிவித்துள்ளாா்.
மேலும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பல துறைகளில் ஏற்படும் விளைவுகளைத் தணிக்குமாறு சந்தை சங்கம் வலியுறுத்தியது.

