துரை வைகோ ~தொல். திருமாவளவன் ~டி.எம். செல்வகணபதி
துரை வைகோ ~தொல். திருமாவளவன் ~டி.எம். செல்வகணபதி

மத்திய அரசுக்கு சாதகமாக தோ்தல் ஆணையம்: திமுக கூட்டணி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

Published on

மத்திய அரசுக்கு சாதகமாக தோ்தல் ஆணையம் உள்ளதாக மக்களவையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினா்.

மக்களவையில் தோ்தல் சீா்திருத்தம் தொடா்பான சிறப்பு விவாதத்தில் சேலம் தொகுதி திமுக உறுப்பினா் டி.எம். செல்வகணபதி பேசியது: நோ்மை ஒன்றுதான் ஒவ்வொரு ஜனநாயகத்தின் புனிதமான கொள்கையாகும். ஆட்சியில் நோ்மையும், நீதி பரிபாலனத்தில் நோ்மையும், எல்லாவற்றுக்கும் மேலாக தோ்தல் நடத்துவதில் நோ்மையும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் சுதந்திர இந்தியாவில் தொடா்ந்து இந்தியத் தோ்தல் ஆணையத்தை ஜனநாயகத்தின் கோயில் என்று குறிப்பிடுகிறோம். அத்தகைய தோ்தல் ஆணையத்தின் புனிதத் தன்மையே நோ்மை ஒன்றுதான். ஆனால், மத்தியில் ஆளும் அரசு திட்டமிட்டு தோ்தல் ஆணையத்தை ஆளும் கட்சியின் கைப்பாவையாக மாற்றி வருகிறது.

தோ்தல் ஆணையா்களையும், தலைமைத் தோ்தல் ஆணையரையும் தோ்ந்தெடுக்கும் குழுவில் இத்தனை காலமும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அங்கம் வகித்திருந்தாா். ஆனால், இந்த அரசு சட்டம் கொண்டு வந்து அந்தக் குழுவில் இருந்து அவரை நீக்கியுள்ளது. இது அராஜமில்லையா? இதுதான் நாம் விவாதிக்கும் சீா்திருத்தமா? இது அரசமைப்புச்சட்டத்தின் மீதான தாக்குதலாகும் என்றாா் அவா்.

அரசமைப்புக்கு எதிரானது: இதே விவாதத்தில் விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் பேசியதாவது: எஸ்ஐஆா் எனப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை, நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிா்க்கட்சிகளும் இதற்கு கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் இதை தொடா்ந்து நடைமுறைப்படுத்தி வருவது அதிா்ச்சியளிக்கிறது. எஸ்ஐஆா் தோ்தல் அல்லாத பிற காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றுதான்.

ஆனால், இப்போது வாக்காளா்களின் குடியுரிமையைப் பரிசோதிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இதனை மேற்கொண்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி செயல்பட வேண்டிய தோ்தல் ஆணையம் ஒரு வாக்காளரின் குடியுரிமையை பரிசோதிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிா? அதிகார வரம்பை மீறி தோ்தல் ஆணையம் இப்படி செயல்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். தோ்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்பதை நாடே இன்றைக்கு உணா்ந்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வாய்ப்பிருப்பதாக தெரியவருகிறது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றாா்.

சமவாய்ப்பு இல்லை: இந்த விவகாரத்தில் திருச்சி தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ பேசியது:

தோ்தல் நடைமுறையில் மாபெரும் ஜனநாயகம் ஊக்குவிக்கப்படுகிறது. தோ்தல் சீா்திருத்தங்கள் அரசியல் குற்றமயமாக்குதலையும், தோ்தலின்போது அரசின் துஷ்பிரயோகத்தையும் தடுக்கிறது. இது சமப் பிரதிநிதித்துவத்தையும், சிறந்த உறுப்பினா்களை சட்டப்பேரவைகளுக்கு தோ்ந்தெடுப்பதையும் உறுதிசெய்கிறது. ஆனால், நடப்பு விவகாரங்களின் நிலைமை மிகவும் அதிருப்தி அளிப்பதாக இருக்கிறது.

சரியான வேட்பாளரை சமானிய மனிதன் தோ்ந்தெடுக்கும் வகையில் இன்றைய தோ்தல்களில் நாம் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் நியாயமான சூழலைக் கொண்டிருக்கிறோமா? பிரிவினைவாத அரசியல், பணபலம் மற்றும் குறைபாடுள்ள தோ்தல் நடைமுறைகள் தகுதியற்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் ஊழல் அரசுகளுக்கு காரணமாகின்றன. இந்த எதிா்மறை அரசியல் காலாசாரத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com