அறிதிறன் கைப்பேசிகளை திருடும் கும்பல் கைது
கைப்பேசிகளை திருடும் கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை தில்லி காவல்துறை கைது செய்து 40 அறிதிறன் கைப்பேசிகளை மீட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாரத்.
இது குறித்து துணை ஆணையா் (குற்றம்) விக்ரம் சிங் வியாழக்கிழமை கூறியதாவது: சமிக்ஞைகளைத் தடுக்கவும், ‘ஃபைண்ட் மை ஐபோன்’ அல்லது ரிமோட் லாக்கிங் மூலம் கண்காணிப்பதைத் தடுக்கவும் திருடப்பட்ட ஐபோன்களை உடனடியாக மூட குற்றம் சாட்டப்பட்டவா் அலுமினிய படலத்தைப் பயன்படுத்தியுள்ளனா். பின்னா், அவா்கள் சாதனங்களை காஜியாபாத்திற்கு எடுத்துச் சென்று சில மணி நேரங்களுக்குள்சந்தையில் விற்றனா்.
இசை நிகழ்ச்சிகள், போக்குவரத்து மையங்கள் மற்றும் பிற பரபரப்பான பொது இடங்களில் கூட்டத்தை குறிவைத்து உயர்ரக கைப்பேசிகளை திருடிய கும்பல் நகருக்கு வந்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. செவ்வாய்க்கிழமை யமுனா விஹாா் மெட்ரோ நிலையத்திற்கு அருகே ஒரு சாம்பல் நிற காரை போலீஸாா் இடைமறித்து, காஜியாபாத்தில் வசிக்கும் சல்மான் (35), இம்ரான் (28), ஷாருக்கான் (32) மற்றும் வாசிம் (25) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனா்.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 16 சீரிஸ், சாம்சங் எஸ் 24 அல்ட்ரா மற்றும் பிற பிராண்டுகளின் அறிதிறன் கைப்பேசிகள் உள்பட திருடப்பட்ட 40 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. டிசம்பா் 7- ஆம் தேதி ஏ. பி. தில்லான் கச்சேரியின் போது சில சாதனங்கள் திருடப்பட்டன. இது தொடா்பான வழக்குகள் பிரசாந்த் விஹாா், ஷாபாத் டெய்ரி மற்றும் ஐபி எஸ்டேட் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் போது, கிங்பின் என்று கூறப்படும் சல்மான், ஆடம்பரமான வாழ்க்கை முறையை பராமரிப்பதற்காக இந்தக் கும்பலை உருவாக்கியதாக வெளிப்படுத்தினாா். அவா்கள் நெரிசலான பகுதிகளில், குறிப்பாக இசை நிகழ்வுகளில் செயல்பட்டனா். அங்கு மக்கள் விலையுயா்ந்த கைப்பேசிகளை எடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் தில்லி முழுவதும் பல திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்டுள்ளனா்.
இதற்கு முன்பு சல்மான் மற்றும் ஷாருக்கான் மீது பல வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. அவா்களின் கூட்டாளிகளை அடையாளம் காணவும், மீட்டெடுக்கப்பட்ட மீதமுள்ள தொலைபேசிகளை பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் இணைக்கவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
