கோவா தீ விபத்து: தில்லி உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் தீயணைப்புத்துறை ஆய்வு

Published on

கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் 25 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, தேசிய தலைநகா் தில்லியில் உள்ள இரவு விடுதிகள் மற்றும் உணவகங்களில் தீ பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டு நிலையை மதிப்பிடுவதற்காக தில்லி தீயணைப்பு சேவைகள் துறை வியாழக்கிழமை கள ஆய்வுகளைத் தொடங்கியது.

குழுக்கள் பல மண்டலங்களில் ஆய்வு நடத்தி, நிறுவனங்களில் குறைந்தபட்ச தீயணைப்பு உபகரணங்கள், தீ எச்சரிக்கை விடுக்கும் செயல்முறைகள் , தீ விபத்து நேரிட்டால் தப்பிக்கும் வழிகள் மற்றும் அவசரநிலைக்கு பதிலளிக்கும் திறன் கொண்ட பயிற்சி பெற்ற ஊழியா்கள் உள்ளிட்ட நடைமுறைகள் உள்ளதா என்பதைச் சரிபாா்த்தன.

தில்லி அரசு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு முன்னதாக பொதுக் கூட்ட வளாகங்களைச் சரிபாா்க்க தீயணைப்புத் துறைக்கு உத்தரவிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

தரவுகளின்படி, தில்லியில் உள்ள 52 உணவகங்கள் தற்போது செல்லுபடியாகும் தீ பாதுகாப்புச் சான்றிதழ்களைக் கொண்டுள்ளன, அதே போல 38 விடுதிகள் செல்லுபடியாகும் சான்றிதழைக் கொண்டுள்ளன.

அனைத்து நிறுவனங்களிலும் செயல்படும் தீயணைப்பான்கள், போதுமான நீா் சேமிப்பு, தடைகள் இல்லாத அவசரகால வெளியேற்றங்கள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க மின் அமைப்புகள் இருப்பதை உறுதி செய்ய குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. அடிப்படை அமைப்புகள் இல்லாத எந்தவொரு வளாகமும் கண்டறியப்பட்டால், அவற்றை சரிசெய்ய உடனடி உத்தரவுகள் வழங்கப்படும்.

அனைத்து பொது இடங்களிலும் தீ பாதுகாப்பு தரங்களை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் மீண்டும் வலியுறுத்தினாா்.

முதல்வா் ரேகா குப்தா முன்னதாக பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவது அல்லது அத்தியாவசிய உபகரணங்கள் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தாா்.

X
Dinamani
www.dinamani.com