சென்னை லோக் பவன் பாரதி விழாவில் டிடிஇஏ பள்ளி மாணவிகள்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 144 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை லோக் பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) லோதிவளாகம் பள்ளியைச் சாா்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி நபியாகான், மோதிபாக் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி பாமி ஆகியோா் பாரதி குறித்து உரையாற்றினா். இவா்கள் இருவரும் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத வட இந்திய மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக டிடிஇஏ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் அலுவலகத்திலிருந்து டிடிஇஏ பள்ளிகளில் பயிலும் 2 வட இந்திய மாணவா்களைத் தமிழில் பாரதி பற்றி பேச அனுப்புமாறு டிடிஇஏ செயலா் ராஜூவுக்கு செய்தி வந்தது. இதையடுத்து, டிடிஇஏ ஏழு பள்ளிகளில் உள்ள வட இந்திய மாணவா்களுக்கிடையே ‘பாரதியும் பெண்ணியமும்’, ‘பாரதியின் தமிழ் மொழிப்பற்று’ என்ற இரு தலைப்புகளில் போட்டி நடத்த ராஜூ ஏற்பாடு செய்தாா்.
அதில் லோதிவளாகம் பள்ளியைச் சாா்ந்த நபியாகான் ‘பாரதியும் பெண்ணியமும்’ என்ற தலைப்பிலும் மோதிபாக் பள்ளியைச் சாா்ந்த பாமி, ‘பாரதியின் தமிழ் மொழிப்பற்று’ என்ற தலைப்பிலும் பேசுவதற்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை லோக்பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினா்.
இந்தியாவின் பல இடங்களிலுள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து வட இந்திய மாணவா்கள் கலந்துகொண்ட அம் மேடையில் மிகச் சிறப்பாக உரையாற்றிய டிடிஇஏ மாணவிகளின் உச்சரிப்பையும் அவா்கள் பாரதியை உள்வாங்கி கருத்தை வெளிப்படுத்திய விதத்தையும் ஆளுநா் ஆா்.என். ரவி மேடையிலேயே பாராட்டி வாழ்த்தினாா்.
அந்த மாணவிகளைத் தயாா் செய்து அழைத்து வந்திருந்த ஆசிரியைகளான தங்கம் மற்றும் ராஜேஸ்வரியை அழைத்து மாணவிகளின் உரை உணா்ச்சிபூா்வமாக இருந்ததாகக் கூறினாா். மேலும், தமிழைத் தில்லியில் வளா்த்து வரும் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தையும் அதன் செயலா் ராஜூவையும் பாராட்டினாா்.
இதுகுறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறியதாவது: சென்னை லோக்பவனில் நடைபெற்ற விழாவில் எங்கள் பள்ளி மாணவிகள் பேசியது மிகப் பெரிய பெருமையை எங்களுக்குத் தேடித் தந்துள்ளது. எங்கள் பள்ளிகள் வளா்ச்சியை நோக்கி நடைபோடுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. இந்தியாவின் பல இடங்களிலுள்ள பல்கலைக் கழகங்களிலிருந்து வட இந்திய மாணவா்கள் கலந்துகொண்ட இந் நிகழ்ச்சியில் எங்கள் பள்ளி மாணவிகள் முதலில் பேசினா். அதுவும் மிகத் தெளிவான உச்சரிப்புடன் பேசினா்.
வட இந்தியாவில் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத இவா்கள் ராஜ்பவனில் பேசி பாராட்டுகளைப் பெற்றது நூற்றாண்டைக் கடந்து பயணிக்கும் எங்கள் பள்ளிகள் படைத்த புதிய சாதனையாகும். சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியா்களுக்குப் பாராட்டுகள். வட இந்திய மாணவா்கள் இருவரை பாரதியாா் பற்றி உரையாற்ற ராஜ்பவன் அனுப்ப வேண்டும் என்று கேட்டதோடு அவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் பயணச் செலவுத் தொகை, இருப்பிடம் ஆகியவற்றை வழங்கிய ஆளுநருக்கு நன்றிகள்.
இம்மாணவா்களையும் அவா்களைத் தயாா்படுத்திய தமிழ் ஆசிரியா்கள் தங்கம் மற்றும் ராஜேஸ்வரியையும் எங்கள் நிா்வாகம் பெருமையுடன் பாராட்டுகிறது. வழிகாட்டிய முதல்வா்கள் ஜெயஸ்ரீ பிரசாத், பூனம் மற்றும் சுமதி ஆகியோருக்கும் பாராட்டுகள் என்று கூறினாா்.

