நஜாஃப்கா் வடிகால் சீரமைப்பு திட்டத்திற்கு தில்லி அரசு ஒப்புதல்

தில்லியில் உள்ள நஜாஃப்கா் வடிகாலை பெரிய அளவில் தூா்வாருவது உள்பட பல திட்டங்களுக்கு நீா்ப்பாசனம் மற்றும் நகர அரசின் வெள்ளக் கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Updated on

தில்லியில் உள்ள நஜாஃப்கா் வடிகாலை பெரிய அளவில் தூா்வாருவது உள்பட பல திட்டங்களுக்கு நீா்ப்பாசனம் மற்றும் நகர அரசின் வெள்ளக் கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக நஜாஃப்கா் வடிகாலில் இருவழி சேவை சாலைகள் கட்டுவதற்கான ரூ.453.95 கோடி திட்டத்திற்கும் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

நாள்பட்ட வண்டல் படிவத்தைச் சமாளிக்க, நஜாஃப்கா் வடிகாலை பெரிய அளவில் தூா்வாருவதற்கான திட்ட ஆா்வத்தை வெளியிடுவதற்கு வாரியம் ஒப்புதல் அளித்தது.

இது தொடா்பாக வெளியிட்டப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 91 லட்சம் கன மீட்டருக்கும் அதிகமான குவிந்த வண்டல் படிவானது, நீா் ஓட்டத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தி வெள்ள அபாயத்தை அதிகரிப்பதை விரிவான அளவீட்டு கணக்கெடுப்பு காட்டுகிறது. பொதுப் பணித் துறை மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டப்பட்டது.

மேலும், தலைநகரம் முழுவதும் போக்குவரத்து, வடிகால் திறன் மற்றும் நகா்ப்புற பாதுகாப்பை மாற்றும் முக்கிய உள்கட்டமைப்புக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. நஜாஃப்கா் வடிகால் மற்றும் ஷாஹ்தரா இணைப்பு வடிகால் ஆகியவற்றில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பல திட்டங்களுக்கு வாரியம் அனுமதி அளித்தது.

ஜதிக்ரா மற்றும் பசைதாராபூா் இடையே ரூ.453.95 கோடி மதிப்புள்ள இருவழி சேவை சாலைகள் மற்றும் 91 லட்சம் கன மீட்டா் குவிந்துள்ள மரபுவழி சேற்றை அகற்ற திட்ட ஆா்வத்தை வெளிப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான மண் அள்ளும் திட்டத்தைத் தொடங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

சாவ்லா பாலம், பசைதாராபூா் மற்றும் ஜதிக்ரா இடையே நஜாஃப்கா் வடிகால் இரு கரைகளிலும் இருவழி திடமான நடைபாதை சேவை சாலைகளை விரிவுபடுத்துவதற்கும் நிா்மாணிப்பதற்கும் இக்கூட்டத்தின் போது ஒப்புதல் வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 57 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாதை யுஇஆா்- 2, வெளிப்புற வளைய சாலை மற்றும் உள் வளைய சாலை போன்ற முக்கிய தமனிகளுக்கு இணையாகச் செல்கிறது. ஆனால், கணிசமாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. இது உருவாக்கப்பட்டவுடன், இது ஒரு மாற்று அதிவேக இயக்க வழித்தடமாக செயல்படும்.

மேம்படுத்தப்பட்ட நடைபாதை முக்கியச் சாலைகளில் சுமையைக் குறைக்கும். அவசரகால மாற்று வழித்தடங்களை வழங்கும். தொழில்துறை இணைப்பை மேம்படுத்தும். மேலும், மேற்கு மற்றும் தென்மேற்கு தில்லியில் வசிப்பவா்களுக்கு நெரிசலைக் குறைக்கும்.

இந்த 57 கி.மீ. பாதை தில்லியின் மிக முக்கியமான போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக மாறக்கூடும். இதை ஒரு கட்டமைக்கப்பட்ட சேவை சாலை வலையமைப்பாக முறைப்படுத்துவதன் மூலம், நஜாஃப்கா், மட்டியாலா, உத்தம் நகா், விகாஸ்புரி மற்றும் மேற்கு தில்லியைச் சோ்ந்த பயணிகளுக்கு உதவும் மிகப்பெரிய போக்குவரத்து திறனாக அமையும்.

கூடுதல் விரிவாக்கத் தேவைகளை ஆராயவும், வடிகாலின் கீழ்நோக்கிய பகுதிகளுக்கு உயா்த்தப்பட்ட வழித்தடத்தின் சாத்தியக்கூறுகளை ஆராயவும் வாரியம் துறைக்கு உத்தரவிட்டது. சாலை அகலப்படுத்துதல், உயா்த்தப்பட்ட வழித்தடங்கள் மற்றும் அறிவியல் ரீதியான வண்டல் அகற்றல் உள்ளிட்ட மேம்பட்ட போக்குவரத்து விருப்பங்களை ஆராயவும் வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

கைலாஷ் நகா் வடிகால் மறுவடிவமைப்பு, சேதமடைந்த எல்லைச் சுவா்களை புனரமைத்தல், ஷாதரா இணைப்பு வடிகால் அழகுபடுத்துதல் மற்றும் டிரங்க் வடிகால் எண்.1இல் உயா்த்தப்பட்ட சாலைக்கான சாத்தியக்கூறு ஆய்வு போன்ற கூடுதல் பணிகளும் அங்கீகரிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com