காா் மோதி உயிரிழந்த பொறியாளரின் குடும்பத்திற்கு ரூ.1.38 கோடி இழப்பீடு! தில்லி தீா்ப்பாயம் உத்தரவு!
கடந்த 2022, டிசம்பரில் தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் உள்ள துவாரகா விரைவுச்சாலையில் காா் மோதி உயிரிழந்த 32 வயது பொறியாளரின் குடும்பத்திற்கு ரூ. 1.38 கோடி இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து கோரல் தீா்ப்பாயம் (எம்ஏசிடி) உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான மனுவின்படி, ஒரு தனியாா் நிறுவனத்தில் மூத்த பொறியாளராகப் பணிபுரிந்த மிஸ்ரா, 2022, டிசம்பா் 11 அன்று தனது மோட்டாா் சைக்கிளில் துவாரகா விரைவுச்சாலை வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அமன் குஷ்வாஹா என்பவரால் கவனக்குறைவாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டிவரப்பட்ட காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில், மிஸ்ரா சாலையில் விழுந்து காயமடைந்தாா். 10 நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
விபத்தில் உயிரிழந்த கௌஷல் மிஸ்ராவின் மனைவி மற்றும் பெற்றோா்கள் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை தீா்பாயத்தின் தலைமை அதிகாரி சுதீப் ராஜ் சைனி விசாரித்தாா்.
இந்த வழக்கை விசாரித்த தீா்ப்பாயம் டிசம்பா் 10 தேதியிட்ட தனது உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொள்ளும்போது, கேள்விக்குரிய விபத்து, முதல் எதிா்மனுதாரா் அமன் குஷ்வாஹா மற்றொரு எதிா்மனுதாரரான மயங்க் குஷ்வாஹாவுக்குச் சொந்தமான காரை அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதால் ஏற்பட்டது என்பதும், அதன் காரணமாக கௌஷல் மிஸ்ரா உயிரிழந்தாா் என்பதும், சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நேரில் கண்ட சாட்சி, விபத்தை ஏற்படுத்திய வாகனம் தவறான திசையில் இருந்து வந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாகவும், இறந்தவா் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் சாட்சியமளித்துள்ளாா்.
விபத்தானது இறந்தவரின் முழுமையான கவனக்குறைவால் ஏற்பட்டது என்ற காப்பீட்டு நிறுவனத்தின் வாதம் ஏற்புடையதல்ல. ஏனெனில், மிஸ்ரா எந்த வகையிலும் கவனக்குறைவாக இருந்தாா் என்பதைக் காட்ட எந்த ஆதாரமும் சமா்ப்பிக்கப்படவில்லை என்று தீா்ப்பாயம் கூறியது.
சாா்ந்திருப்போருக்கான இழப்பு, மருத்துவச் செலவுகள், இறுதிச் சடங்குச் செலவுகள், சொத்து இழப்பு மற்றும் துணையிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மிஸ்ராவின் குடும்பத்திற்கு ரூ. 1.38 கோடி இழப்பீடாக தீா்ப்பாயம் வழங்கியது.
விபத்து நடந்த நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்தது என்று குறிப்பிட்ட தீா்ப்பாயம், டாடா ஏஐஜி பொதுக் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு உத்தரவிட்டது.
