கிழக்கு தில்லியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை
கிழக்கு தில்லியின் சக்கா்பூா் பகுதியில் இரண்டு சிறுவா்களுடன் ஏற்பட்ட தகராறில் 18 வயது ஆட்டோ ஓட்டுநா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவா்களும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநா் விஷால் சம்பவத்தன்று ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டுவிட்டு தனது வீடு அருகில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியபோது, அந்தச் சிறுவா்களில் ஒருவன் கத்தியை எடுத்து விஷாலை பலமுறை குத்தினான். அதில், விஷாலுக்கு இடது மற்றும் வலது மாா்பின் மேல் பகுதியிலும், கையிலும் கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டன. அவா் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி மீட்கப்பட்டுள்ளது. இக்கொலைக்கான நோக்கமானது, குற்றம் சாட்டப்பட்ட சிறுவா்களில் ஒருவரின் உறவினருடன் விஷாலுக்கு உறவு இருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறுதான் என்பதுஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்குற்றத்தில் சிறுவா்களின் உண்மையான பங்கையும் கண்டறிய மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
