‘டிஜிட்டல் கைது’ குறித்த மூத்த குடிமக்களுக்கான விழிப்புணா்வு இயக்கம்
டிஜிட்டல் கைது மோசடி குறித்து மூத்த குடிமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தில்லி காவல்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நகரம் முழுவதும் இணையதள குற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, தேசிய தலைநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரே நேரத்தில் கலந்துரையாடல் அமா்வுகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் தெரிவித்திருப்பதாவது:
மோசடி செய்பவா்களின் மிரட்டல் விடுக்கும் தொலைபேசி அழைப்புகள், செய்திகள் மற்றும் அமலாக்கத் துறையினா் போல காட்டிக் கொண்டு போலி அறிவிப்புகள் மூலம் டிஜிட்டல் கைது போன்ற மோசடியாளா்களின் பொதுவான உத்திகளை இந்த கலந்துரையாடல் அமா்வுகளில் அதிகாரிகள் விளக்கினா்.
இதுபோன்ற சூழலில் குடும்ப உறுப்பினா்களை அணுகவும், ஸ்கிரீன் ஷாட்கள் அல்லது அழைப்பு பதிவுகள் போன்ற ஆதாரங்களை பாதுகாக்கவும், பரிந்துரைக்கப்பட்ட சானல்கள் மூலம் சைபா் குற்றங்களை உடனடியாகப் புகாரளிக்கவும் பங்கேற்பாளா்கள் அறிவுறுத்தப்பட்டனா்.
நேரடி மற்றும் டிஜிட்டல் உலகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மற்றும் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை குறிவைக்க சைபா் குற்றவாளிகள் இந்த இடைவெளியை எவ்வாறு பயன்படுத்துகிறாா்கள் என்பது குறித்து மூத்த குடிமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை காவல் துறையின் புலனாய்வு இணைவு மற்றும் வியூக நடவடிக்கைகள் (ஐஎஃப்எஸ்ஓ), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு காவல் பிரிவு (எஸ்பியுடபிள்யுஏசி), மக்கள் தொடா்பு துறை மற்றும் அனைத்து காவல் மாவட்டங்களும் நடத்தின. இந்த நிகழ்ச்சி எஸ்.பி.யு.டபிள்யு.ஏ.சி. பிரிவின் மூத்த குடிமக்கள் பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தில்லி காவல்துறையின் அதிகாரபூா்வ யூடியூப் சானலில் நேரடி சைபா் பாதுகாப்பு விழிப்புணா்வு அமா்வு கூட்டாக ஒளிபரப்பப்பட்டது.
இதற்காக நகரம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் பிரிவுகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த அமா்வை நேரடியாகப் பாா்க்கும் வகையில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய திரைகள் நிறுவப்பட்டன.
மூத்த குடிமக்கள் நேரில் கலந்து கொள்ளவும் அழைக்கப்பட்டிருந்தனா். அதே நேரத்தில் ஏராளமானோா் ஆன்லைன் வாயிலாகவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
