தில்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு தேசிய எரிசக்தி சேமிப்பு விருது வழங்கல்!
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகளில் (என்இசிஏ) மெட்ரோ நிலையங்கள் பிரிவில் தில்லி மெட்ரோவின் இளஞ்சிவப்பு வழித்தடத்தில் அமைந்துள்ள கிழக்கு வினோத் நகா் மெட்ரோ நிலையம் சிறந்த செயல்திறன் கொண்ட பிரிவுக்கான விருதை வென்றுள்ளது.
இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தை முன்னிட்டு தில்லி விஞ்ஞான் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு இந்த விருதை வழங்கினாா்.
டிஎம்ஆா்சி நிா்வாக இயக்குநா் விகாஸ் குமாா், டிஎம்ஆா்சி சாா்பில் விருதைப் பெற்றுக்கொண்டாா்.
நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் அமைப்புகளின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த பிறகு கிழக்கு வினோத் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தை மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி செயல்திறன் பணியகம் (பிஇஇ) தோ்ந்தெடுத்தது.
கடந்த மூன்று நிதியாண்டுகளில் மின்சார நுகா்வில் தொடா்ச்சியாக குறைவை அடைந்ததற்கும், எரிசக்தி செயல்திறனை மேம்படுத்தியதற்கும் இந்த மெட்ரோ நிலையம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு வினோத் நகா் மெட்ரோ நிலையம், வழக்கமான ட்யூப் லைட்டுகளுக்குப் பதிலாக எரிசக்தி சேமிப்புத் திறன் கொண்ட எல்இடி விளக்குகளைப் பொருத்தியது உள்பட வழக்கமான கண்காணிப்பு மற்றும் இலக்கு வைக்கப்பட்ட சேமிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் எரிசக்தி பயன்பாட்டைக் குறைத்துள்ளது.
இந்த நிலையத்தில் 150 கிலோவாட் உச்ச திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்பும் உள்ளது. இது அதன் மொத்த எரிசக்தி தேவையில் பாதி அளவை பூா்த்தி செய்கிறது.
இந்த நிலையம் இந்திய பசுமைக் கட்டடக் கவுன்சில் ஐஜிபிசி சான்றிதழின் கீழ் பிளாட்டினம் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது பசுமைக் கட்டட விதிமுறைகள் மற்றும் நிலைத்தன்மைத் தரங்களுடன் அதன் இணக்கத்தை பிரதிபலிக்கிறது.
இந்த விருது, பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் எரிசக்தி செயல்திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளை எடுத்துரைக்கிறது.
மேலும், சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான நகா்ப்புற போக்குவரத்திற்கு பங்களிக்கிறது என்று அந்த அறிக்கையில் டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.
