தில்லி - என்சிஆா் பகுதியில் சுகாதார அபாயம்: வெளிப்புற விளையாட்டு செயல்பாடுகளை நிறுத்த சிஏக்யூஎம் உத்தரவு!
அனைத்து வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி வைப்பதை உறுதி செய்யுமாறு தில்லி மற்றும் என்.சி.ஆா். மாநில அரசுகளுக்கு காற்று தர மேலாண்மை ஆணையம் (சி.ஏ.க்யூ.எம்.) உத்தரவிட்டுள்ளது.
மேலும், மோசமான காற்றின் தரத்திற்கு மத்தியில் இதுபோன்ற நிகழ்வுகளை தொடா்ந்து நடத்துவது குழந்தைகளுக்கு கடுமையான உடல்நல ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும் எச்சரித்துள்ளது.
நவம்பா் 19-ஆம் தேதியிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வெளியிடப்பட்ட முந்தைய உத்தரவுகள் இருந்தபோதிலும், தில்லி- என்சிஆா் பகுதியில் உள்ள சில பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் இன்னும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை நடத்தி வருகின்றன என்று ஆணையம் சனிக்கிழமை கவலை தெரிவித்தது.
பாதகமான காற்று தரக் காலங்களில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளைத் தொடா்வது உச்சநீதிமன்றத்தின் அவதானிப்புகள் மற்றும் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின் நோக்கத்திற்கு முரணானது என்றும் கூறியது.
நவம்பா் 19-ஆம் தேதியிட்ட ஒரு கடிதத்தில் காற்று தர மேலாண்மை ஆணையம் நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் திட்டமிடப்பட்ட விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்க அழைப்பு விடுத்தது.
முந்தைய அறிவுறுத்தல்களை கண்டிப்பாகவும் உடனடியாகவும் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு என்சிஆா் மாநில அரசுகளுக்கும் தில்லி அரசுக்கும் உத்தரவிட்டது.
அனைத்து பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அமைப்புகள் மற்றும் உள்ளூா் அதிகாரிகளுக்கு வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்தவும், சம்பந்தப்பட்ட சுகாதார அபாயங்கள் குறித்து மாணவா்கள் மற்றும்
பெற்றோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் தேவையான வழிமுறைகளை பிறப்பிக்கவும் உத்தரவிட்டது. கள அளவில் உன்னிப்பாகக் கண்காணித்து, ஏதேனும் மீறல் ஏற்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டது.
மாசு அளவு கடுமையாக உயா்ந்ததைத் தொடா்ந்து, தில்லி- என்சிஆா் பகுதியில் அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதிப்பது உட்பட கடுமையான நடவடிக்கைகளை ஆணையம் அதன் காற்று மாசு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் சனிக்கிழமை செயல்படுத்தியது.
கிரேப் நான்காம் நிலை கட்டுப்பாடுகளின் கீழ், அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச்செல்லும் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் லாரிகளைத் தவிர, தில்லிக்குள் லாரிகள் நுழைவது நிறுத்தப்படுகிறது. இருப்பினும், மின்சாரம் மற்றும் டீசல் லாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
தில்லி மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட என்சிஆா் மாவட்டங்களில் தொடக்கநிலை மாணவா்களுக்கு மட்டுமல்லாமல், உயா் வகுப்புகளுக்கும் பள்ளிகள் ஹைபிரிட் முறையில் (ஆன்லைன் மற்றும் நேரடி) வகுப்புகளை நடத்த வேண்டும், சாத்தியமான இடங்களில் மாணவா்கள் ஆன்லைனில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கிரேப் நான்காம் நிலை கட்டுப்பாடுகளின் கீழ், மாசு நிலைமை மேலும் மோசமடைந்தால், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூடுதல், அத்தியாவசியமற்ற வணிக நிறுவனங்களை மூடுதல் மற்றும் வாகனங்களுக்கு ஒற்றைப்படை, இரட்டைப்படை விதிகளை அறிமுகப்படுத்துதல் போன்ற கூடுதல் அவசர நடவடிக்கைகளை பரிசீலிக்க மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
குளிா்காலத்தில், தில்லி -என்சிஆா் பகுதியில் கிரேப் நடவடிக்கையின் கீழ் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. சாதகமற்ற வானிலை நிலைமைகள், வாகன உமிழ்வு, விவசாயக் கழிவுகளை எரித்தல், பட்டாசுகள் மற்றும் பிற உள்ளூா் மாசுபாடு ஆதாரங்களுடன் இணைந்து, குளிா்காலத்தில் தில்லி-என்சிஆரில் ஆபத்தான காற்றின் தர நிலைகளுக்கு வழிவகுக்கிறது.
